நெல்லையில் 600 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது..!! 

Estimated read time 0 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நான்கு பேரிடம் போலீசார் நடத்திய சோதனையில் 600 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்தக் கும்பலைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ரிஷிகேஷ் (19), விஜய் ஆதித்தன் (22), ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (21) மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவர் என நால்வரும் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட உடைமைச் சோதனையில், மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலும் பயன்படுத்த வேண்டிய டேபென்டடால் , நைட்ராசெபாம் மாத்திரைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரைகள் மருத்துவ நோக்கத்திற்கு மாறாக போதை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துவதற்காகச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், மொத்தம் 60 ஸ்லிப்புகளில் இருந்த 600 மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் மூவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவன் தொடர்பாக இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் சூழலில், திருநெல்வேலியில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், சென்னையின் கீழ்ப்பாக்கத்திலும் மெத்தபெட்டமைன் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேசப்பட்டது. இந்தப் பின்னணியில், போதை ஏற்படுத்தும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் மாத்திரைகளின் சட்டவிரோதப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த திருநெல்வேலி மாவட்ட போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author