‘அர்னாப்’ புயல் மிகத் தீவிரமடைந்தது! தமிழகத்தில் இனி மழை எப்படி இருக்கும்?

Estimated read time 1 min read

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ புயல், மிக தீவிர புயலாக (Very Severe Cyclonic Storm) வலுப்பெற்றுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று (அக்டோபர் 26) மாலை 5:30 மணி அளவில் தீவிர புயலாக இருந்த அர்னாப், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நள்ளிரவு 11:30 மணி அளவில் மிக தீவிர புயலாக மாறியது. இன்று (அக்டோபர் 27) காலை 8:30 மணி நிலவரப்படி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் அதே வீரியத்துடன் நிலைகொண்டுள்ள இந்த புயல், இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

அதன் பிறகு, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்டோபர் 28) ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதிக்கு அருகில் மிக தீவிர புயலாகவே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் நகர்வின் காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு படிப்படியாகக் குறைந்து, வறண்ட வானிலை நிலவத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (27-10-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் ஏனைய வட மற்றும் கடலோரத் தமிழகப் பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

இதனைத் தொடர்ந்து, நாளை (அக்டோபர் 28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் லேசான மழை நீடிக்கும். அக்டோபர் 31-ஆம் தேதியன்று தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வாராந்திர வானிலை முன்னறிவிப்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author