குழந்தைகளின் கலைக்கூடம் – ‘இசை மணல் ஆறு’!

Estimated read time 1 min read
நூல் அறிமுகம் :

‘இசை மணல் ஆறு’ – குழந்தைமையின் காலம் தாண்டிய கீதம். பொதுவாக குழந்தை இலக்கியம் சொற்களைச் சுருக்குவது அல்ல; உலகத்தைப் பெரிதாக்குவது.
அமுதகீதனின் ‘இசை மணல் ஆறு’ அந்தப் பெருவெளியை 72 பக்கங்களில் சாத்தியப்படுத்துகிறது.
இது வெறும் மழலைப் பாடல் தொகுப்பு அல்ல. 08-04-1982 முதல் 31-05-2017 வரையிலான ஆசிரியப் பணியின் சாரம்.
‘மாணவத் தோழர்கள்’ என்று அவர் நேசித்த பிள்ளைகளிடம் பெற்றுக்கொண்ட அமுதசுரபி.
ஒவ்வொரு பாடலும் ஒரு வகுப்பறை.

ஒவ்வொரு வரியும் ஒரு வாழ்க்கைப் பாடம்.
காட்சியும் கவிதையும் :
அட்டைப்படம் பேசும் மொழி, ஓவியர் வீரசந்தானத்தின் ஆன்மகாட்சி.
பனைமரம், அதன் நிழலில் கூடுகட்டும் பறவைகள், குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் தாய்ப் பறவை. இது வெறும் ஓவியமல்ல. ‘ஆசிரியன்’ என்ற பனை, ‘மாணவத் தோழர்கள்’ என்ற குஞ்சுகளுக்கு அறிவுப்பால் ஊட்டும் காட்சி.
கருப்பு-வெள்ளைக் கோடுகளில் கிராம பாரம்பரியத்தின், பாசத்தின் சாரத்தைப் படம் பிடித்திருக்கிறார் ஓவியர்.
உள்ளடக்கத்தின் கனத்துக்கு ஏற்ற கனமான அட்டை.
அட்டைப் படத்தில் பனை மரமாய் நின்று பிள்ளைகளுக்கு இரையூட்டும் ஆசிரியன், உள்ளே பக்கம் தோறும் மண்டைக்குள் இருந்து முளைவிடும் மரமாய் அறிவு பாய்ச்சுகிறார்.

இந்த ஓவியம்,
‘வாசிப்பு என்பது

வெறும் ஏட்டுக்கல்வி அல்ல;

மூளைக்குள் வேர்விட்டு

கிளைபரப்பும்

ஓர் உயிர்ப் பயிர்’

– என்கிறது.
கவிஞரின் ‘குறள் பூக்கள் நாங்கள்’ என்ற வரிக்கு, ஓவியரின் ‘தலைக்குள் முளைக்கும் செடி’ அற்புதமான காட்சி விளக்கம்.
’நிஜத்தில் சொல்

எங்கு முடிகிறதோ..

அங்கு கோடு தொடங்குகிறது.

மொழியின் இசையும்

கோட்டின் அசைவும்

அமுதகீதனின் பாடல்கன்

சந்தம்’
காற்றில் அசையும் பனை, சிறகடிக்கும் பறவை, வேர் பரப்பும் செடி என எல்லாம் உயிரோடு இருக்கின்றன. இது குழந்தைக்கு ‘வாசிப்பு + பார்வை’ என்ற இரட்டை அனுபவத்தைத் தருகிறது.
இலைகள் உதிர்ந்த வெற்றுக் கிளையில், பறவைகள் சில தனித்தும் சில ஜோடியாகவும் அமர்ந்திருக்கின்றன.
இது விடுதலைக் குறியீடு.
கற்றுத் தேர்ந்த பறவைகள் தம் சொந்த வானத்தைத் தேடிப்பறக்க ஆயத்தமாகும் பருவம்.
ஓர் ஆசிரியனின் கடமை பாடம் சொல்வதோடு முடிவதில்லை; பறக்கக் கற்றுக்கொடுத்து விடைகொடுப்பது என்ற பேருண்மையை இவ்வோவியம் சொல்லாமல் சொல்கிறது.
கவிஞரின் நிழற்படம் :
கவிஞரின் படம் நூலின் சாரம்சம்.
வெண்தாடி, தலையில் தொப்பி, கண்ணில் கனவு, சட்டைப் பையில் சிவப்புநிறப் பேனா, கையில் மிதிவண்டி, பின்னால் பனைமரம், அதனருகே நின்ற காட்சி.

இது 35 ஆண்டு ஆசிரியப் பயணத்தின் ஒரு கணம்.
கிராமத்து மண்ணில் வேரூன்றி, குழந்தைகளுக்காகவே மிதிவண்டியில் சுற்றிய, ‘மாணவத் தோழமையின்’ அசல் தோற்றமும் இதுவே.
மொழியும் இசையும் :
குழந்தையின் காதுக்கான மெட்டு அமுதகீதனின் பலம். சந்தத்தின் மீதான அவர் ஆளுமை.

‘பூ பூ பூவென்று

பூப்பறிக்க ஓடினான்

தீ தீ தீ யென்று

தீண்டத்தான் அஞ்சினான்’

– என்று தொடங்கும் பாடல், ஒலிக்குறிப்புச் சொற்களால் குழந்தையின் நாக்கில் நடனமாடுகிறது.
‘வா வா வா’, ‘தா தா தா’, ‘கா கா கா’ என்ற அடுக்கு, விளையாட்டின் தாளகதியை அப்படியே எழுத்தாக்குகிறது.
இது வெறும் சொல் விளையாட்டு அல்ல. மழலையின் மொழி கற்றலுக்கான ஒலிப்பயிற்சி.

படிமமும் பண்பாடும் :
இத்தொகுப்பு – வேருக்கு நீர்.
குழந்தையை வெறும் கற்பனையில் மிதக்க விடவில்லை. மண்ணில் வேரூன்ற வைக்கிறது.
‘குறள் பூக்கள் நாங்கள்

குறள் பூக்கள் நாங்கள்

அறம் பொருள் இன்பத்தின்

அணிவகுப்பு நாங்கள்’
– என்று குழந்தையை திருக்குறளின் வாரிசாக்குகிறார்.
ஒளவையின் ஆத்திசூடியை ‘எலியாரே எலியாரே எங்கே போறீங்க?’ என்ற கேள்வி-பதில் பாணியில் அறிமுகப்படுத்தும் உத்தி, மரபைச் சுமையாக்காமல் விளையாட்டாக்குகிறது.
வரலாறும் விழுமியமும் :
சிறிய தலைக்குள் பெரிய உலகம். காந்தி, காமராசர், பட்டேல், அம்பேத்கர் என தேசத் தலைவர்களை ‘சாந்தி நிலவு’ என்றும், அண்ணாவை ‘அறிவின் சிகரம்’ என்றும் எளிய சொற்களில் பதிய வைக்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் வரலாற்றை பாடலாக்கி, ‘விடுதலை என்பது வரலாறு’ என்று விதைக்கிறார்.
இது அரசியல் அல்ல; வேர்களை அறிமுகப்படுத்தும் வரலாற்றுணர்வு.
கனவும் அறமும் :

’நாளைய மனிதனுக்கான விதை’ தொகுப்பின் உச்சம்.
‘கனவு காணுவோம்’ பாடல்.
’அறிவியல் அறிவோம்

அறிவினில் உயர்வோம்
அகிலத்தை அளந்திடுவோம்

பொறியியல் பயில்வோம்’
– இங்கு கவிஞர் குழந்தையிடம் கற்பனையை மட்டும் கேட்கவில்லை; அறிவியல், சூழலியல், அஞ்சாமை என நாளைய உலகுக்கான பண்புகளை விதைக்கிறார்.
‘இயற்கையைப் போற்றுவோம்

ஏரிபொருள் சேமிப்போம்’

– என்னும் வரிகள் தற்காலத்தின் அவசியம்.
ஆசிரியர் தன் முன்னுரையில் இவற்றை ‘மருந்துப்பாட்டு’ என்கிறார். ஆம், இவை நோய் தீர்க்கும் பாடல்கள்.
வெறுப்புக்கு மருந்து, அறியாமைக்கு மருந்து, மறதிக்கு மருந்து –
‘இளைய தளிர்களுக்கு

ஊட்டிடும்

உணர்வுப் பாடல்கள்

உயிர்ப் பாடல்கள்’
– என்ற அவரது வாக்கு முற்றிலும் உண்மை.
‘இசை மணல் ஆறு’ சிறார் இலக்கியத்தில் ஒரு முக்கிய ஆவணம். இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் மூன்றும் கலந்த குழந்தைமையின் கீதம்.
அமுதகீதன் எனும் ஆசிரியன், தன் மாணவர்களின் ‘சான்றிதழ்’ கொண்டு வரைந்த வரலாற்றுச் சித்திரம்.
ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல் ‘இசை-மணல்-ஆறு.
– மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.

************
படைப்பு : இசை மணல் ஆறு (மழலைப் பாடல்கள்)

படைப்பாளி : அமுதகீதன்

வெளியீடு : ஜோதி பதிப்பகம், சென்னை

விலை : ரூ. 100/-

பதிப்பு : ஜனவரி 2025.

The post குழந்தைகளின் கலைக்கூடம் – ‘இசை மணல் ஆறு’! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author