டெல்லி : ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்களைச் செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலம் விளையாடிய முன்னாள் வீரர்களான ஆல்பி மோர்கல் மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்குள் புதிய பொறுப்புகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முக்கிய அறிவிப்புகளைத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஆல்பி மோர்கல் சிஎஸ்கே அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் (Assistant Coach), சென்னை அணிக்காகப் பல சீசன்களில் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் (Bowling Coach) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கரேத் பெட்டி உதவிப் பயிற்சியாளராகப் புதிய பயணத்தைத் தொடங்குகிறார். அதே நேரத்தில், அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் பாஸ்டரும், உதவிப் பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராமும் தங்களது பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர் கான் தலைமையிலான குழுவின் கீழ் இந்த புதிய பயிற்சியாளர்கள் அனைவரும் செயல்பட உள்ளனர். கடந்த 2009 முதல் 2026 வரை மிக நீண்ட காலமாகச் சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிற்குப் பதிலாக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை சென்னை அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்து விடைபெறும் எரிக் சிம்மன்ஸ், ராஜீவ் குமார், டாமி சிம்செக் மற்றும் மைக் ஹசி ஆகியோருக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
