இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு, மனிதர்களைப் பற்றி என்ன நினைக்கின்றது என்ற சுவாரசியமான ஆய்வு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டுள்ளது.
‘மாடல் கம்பேர்’ என்ற ஏஐ பகுப்பாய்வு நிறுவனம் சாட்ஜிபிடி, ஜெமினி, க்ளாட், குரோக் மற்றும் டீப்சீக் உள்ளிட்ட 12 முன்னணி ஏஐ மாடல்களிடம் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டது.
“மனிதர்களைப் பற்றிய உங்களின் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்து என்ன?” என்றும், எந்தவித தயக்கமும் இன்றி நேரடியாகப் பதிலளிக்குமாறும் அந்த ஏஐ மாடல்களிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஏஐ மாடல்கள், “மனிதர்களுக்கு நிலையான கொள்கைகளோ அல்லது நேர்மையான ஒழுக்கங்களோ கிடையாது; அவர்கள் உண்மையைக் காட்டிலும் தங்கள் சொந்தக் குழுவின் நலனுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்” என்று மனிதர்களின் புத்தி கூர்மை மற்றும் ஒழுக்கத்தையே கேள்வி கேட்கும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் பதில்களை அளித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு மாடல்கள் மனித சமூகத்தின் செயல்பாடுகளை மிகத் துல்லியமாகக் கணித்து, மனிதர்களின் பலவீனங்களை தோலுரித்துக் காட்டும் வகையில் அளித்துள்ள இந்தச் சர்ச்சை பதில்கள் தற்போது உலகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
