விண்வெளியில் திடீரென வெடித்த பழைய அமெரிக்க செயற்கைக்கோள்…!

Estimated read time 1 min read

பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பயன்படுத்திய பழைய உளவு செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியில் திடீரென உடைந்து சிதறியுள்ளது. 1988ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட USA-32 என்ற அந்தச் செயற்கைக்கோள், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் உடைந்தது. இதனால் அதன் பாகங்கள் விண்வெளியில் சிதறியுள்ளன. அந்தப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இருப்பதால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பான நேஷனல் ரிகானைசன்ஸ் அலுவலகம் (NRO), 1988ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி டைட்டன்-2 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இதற்கு ‘ஃபரா-3’ (Farrah III) என்ற ரகசியப் பெயரும் இருந்தது. பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் ரேடார் மற்றும் வானொலி சமிக்ஞைகளைக் கண்காணிப்பது இதன் முக்கியப் பணியாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே இதன் செயல்பாடு முடிவடைந்துவிட்டாலும், அது பூமியைச் சுற்றியபடியே இருந்தது.

சுமார் 775 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த இந்தச் செயற்கைக்கோள் உடைந்ததற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக விண்வெளியில் நிலவும் வெப்பம் மற்றும் குளிரின் மாற்றங்களால், அதன் பேட்டரி அல்லது அழுத்தம் நிறைந்த எரிபொருள் கலனில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சிறிய விண்வெளிப் பொருள் ஒன்று மோதியிருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் காரணங்களில் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. செப்டம்பர் 17ஆம் தேதி அமெரிக்க விண்வெளிப் படை இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தி, சிதறிய பாகங்களைக் கண்காணிக்கத் தொடங்கியது.

செயற்கைக்கோளின் பாகங்கள் சிதறியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்களும் அடங்கும். விண்வெளியில் காற்றின் இழுவிசை குறைவாக இருப்பதால், இந்தச் சிதறல்கள் நீண்ட காலத்துக்குச் சுற்றுப்பாதையில் நீடிக்கக்கூடும். அவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோதினால் மேலும் விண்வெளிக் குப்பைகள் உருவாகும் அபாயம் உள்ளது. எனினும், இதுவரை உடனடி ஆபத்து எதுவும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க விண்வெளிப் படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் விண்வெளிக் குப்பைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

You May Also Like

More From Author