நவம்பர் 2-ல் ஆந்திரா அருகே நெருங்கும் புயல்… தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு!

Estimated read time 1 min read

சென்னை : தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவடைந்துள்ளது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும் (Cyclonic Storm) மாறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப்புயல் மேலும் நகர்ந்து, வரும் நவம்பர் 2-ஆம் தேதி மாலை வேளையில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெருங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, நாளையும் (நவம்பர் 1) வடக்கு கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் நகரும் திசையைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 2-ஆம் தேதி நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக, நவம்பர் 3-ஆம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author