தென்கொரிய நிறுவனங்களின் ஆயிரத்து 614 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், தவெக அரசின் கவனக்குறைவால் ஆந்திர மாநிலத்திற்கு கைமாறியுள்ள சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் தென் கொரியா விநியோகஸ்தர்களான ஹ்வாஷின், சியோயான் மற்றும் இவாமெட் ஆகிய நிறுவனங்களுடன் முந்தைய திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் ஆந்திரப் பிரதேசம் அனந்தபுரத்தில் இதே தொழிற்சாலைகளை தொடங்க ஆந்திர அரசுடன் மொத்தம் ஆயிரத்து 614 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிறுவனங்களின் மனமாற்றம் குறித்த கேள்விகளுக்கு தமிழக அரசின் ஒருங்கிணைப்பு முகமையான ‘கைடன்ஸ்’ பதிலளிக்கவில்லை எனவும், விரைவாகவும், உயர் மட்டத்திலான தொடர்புகளை மேற்கொண்டதாலும் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி மேற்கண்ட நிறுவனங்களின் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் ஆந்திர மாநிலம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுலபமாக வந்திருக்க வேண்டிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் நழுவியதை தமிழகத்தின் தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தொடர்புடைய நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையிலும், கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு ஆந்திராவிடம் பறிகொடுத்ததற்கு தவெக அரசு வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், பொருளாதார வளர்ச்சியில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகவும்,
ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3 சதவீத வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாக காண வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
