கந்தன் அருள் இருந்தால் எந்த வினையானாலும், வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.
பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விரதம் துவங்கி, முதல் நாள் நிறைவடைந்துள்ளது. எந்த முறையில் முதல் நாள் விரதத்தை துவங்கினீர்களோ, அதே முறையிலேயே இரண்டாவது நாளும் விரதத்தை தொடர வேண்டும். கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாவது நாளில் காலை, மாலை இரு வேளையும் ஷட்கோண தீபம் ஏற்ற வேண்டும். முதல் நாள் “ச” என்ற எழுத்தின் மீது ஒரு நெய் தீபம் ஏற்றியதை போல், இரண்டாம் நாளில் “ர” என்ற எழுத்தின் மீது இரண்டாவது விளக்கை ஏற்ற வேண்டும். அதாவது, “ச” மற்றும் “ர” ஆகிய இரண்டு எழுத்துக்கள் மீதும் விளக்குகள் ஏற்ற வேண்டும்.
பல வகையான கலவை சாதங்களில் ஏதாவது ஒரு சாதத்தை முருகப் பெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பழத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளில் வறுமை நீங்கி, செல்வ நிலை உயர அருணகிரிநாதர் இயற்றிய திருவண்ணாமலை தலத்திற்குரிய திருப்புகழும், கந்தர் அனுபூதி பாடலையும் பாடி முருகப் பெருமானை வழிபட வேண்டும்.
வறுமை நீங்கி செல்வ வளம் பெறுக படிக்க வேண்டிய திருப்புகழ்:
“சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே பசியாறி
திகழ்வோ டிருவோர் ஒருரூபமதாய்
திசைலோ கமெலாம் அநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோர்
இளையோ னெனவே மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
இயல்வே லுடன்மா அருள்வாயே
தவலோ கமெலாம் முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோய் அசுராரைத்
தலைதூள் பட ஏழ் கடல்தூள் பட
மாதவம்வாழ் வுறவே விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன் மால்
கடனா மெனவே அணைமார்பா
கடையேன் மிடிதூள் பட நோய் விடவே
கனல்மால் வரைசேர் பெருமாளே.”
செல்வ வளம் பெறுக படிக்க வேண்டிய கந்தர் அநுபூதி:
“வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.”
கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளில் மட்டுமின்றி, தினமும் காலை மற்றும் மாலை இரு வேளையும் இந்த பாடல்களை பாடி முருகப் பெருமானை வழிபட வேண்டும். அதே போல், 48 நாளைக்கு தினமும் ஷட்கோண தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபட வேண்டும். தினமும் ஆறு தீபங்கள் ஏற்றி, இந்த பாடல்களை மனதார பாடி வழிபட்டால் அடுத்த ஆண்டு கந்த சஷ்டி விரதத்திற்குள் வறுமை நிலை மாறி, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை நீங்கள் அடைந்திருப்பீர்கள். முருகனை மனதார நினைத்து இந்த திருப்புகழை தினமும் சொல்லி வழிபட்டால் முருகனின் அருளால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
முருகப் பெருமானின் அருள் பெற இது சிறந்த காலம் என்பது ஐதீகம்.
தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசத்தினை படித்தோ, கேட்டோ முருகப்பெருமானின் அருளை பெறுங்கள்.
