சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அது அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த அமைப்பு மேலும் வலுப்பெற்று, வரும் நவம்பர் 16-ஆம் தேதி மாலையளவில் வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இது ஒரு அதிதீவிர காற்றழுத்த மண்டலமாக அல்லது புயலாகக் கடலுக்குள்ளேயே வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் இதர கடலோரப் பகுதிகளில் வானிலை நிலவரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாகக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவாகிவரும் இந்தச் சீற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள அனைத்து மீனவர்களும் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடலுக்குச் சென்றுள்ளவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தங்களது துறைமுகங்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்பிவிட வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களுக்குப் பல்வேறு கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் பகுதி: நவம்பர் 17-ஆம் தேதி வரை இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி: நவம்பர் 17-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதி: வரும் நவம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரை இப்பகுதிக்கு முற்றிலும் செல்லக் கூடாது. மத்திய வங்கக்கடல் பகுதி…நவம்பர் 16 முதல் 19-ஆம் தேதி வரை இப்பகுதிகளுக்குச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
புயல் உருவாகும் இந்தச் சூழலின் காரணமாக, செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் பெரிய அளவில் பரவலான மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட அல்லது லேசான வானிலை மட்டுமே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயலின் நகர்வுக்கு ஏற்ப வானிலை நிலவரத்தில் அடுத்தடுத்த மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், கடல் பகுதிக்குச் செல்வோரும், மீனவக் குடும்பத்தினரும் அரசு மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளைக் கவனமுடன் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
