ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயது கேப்டன் என்ற பிரம்மாண்ட உலக சாதனையை 15 வயதே ஆன இந்திய இளம் அதிரடி பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பீகார் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் பீகார் சீனியர் ஆடவர் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார். 15 வயது மற்றும் 232 நாட்களே ஆன நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான பலம் வாய்ந்த சௌராஷ்டிரா அணியை எதிர்கொண்டதன் மூலம், ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயது கேப்டன் என்ற புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். கேப்டனாகத் தனது முதல் போட்டியிலேயே டாஸ் வென்ற இடதுகை பேட்டரான வைபவ், முதலில் பேட்டிங் செய்வதைத் தேர்வு செய்தார்.
முன்னதாக, இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட பீகார் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும், சூரஜ் காஷ்யப் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
Toss Update
Bihar have won the toss and elected to bat first against SaurashtraVaibhav Sooryavanshi takes charge by becoming the youngest captain in Men’s T20 history at just 15
Scorecard
https://t.co/gfZV5ZjIph
#SMAT | @mflone_ https://t.co/23RFmME9fA
— BCCI Domestic (@BCCIdomestic) November 14, 2026
வைபவ் சூர்யவன்ஷிக்குத் தலைமைப் பொறுப்பு என்பது புதிதல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக அவர் செயல்பட்டார். அந்தத் தொடரில் கேப்டன் இஷான் கிஷன் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியபோது, தற்காலிக கேப்டனாகவும் அணியை வழிநடத்திய அனுபவம் இவருக்கு உண்டு.
இதற்கிடையில், வரும் நவம்பர் 19-ஆம் தேதி கத்தாரில் தொடங்கவுள்ள ‘ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை’ தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியில் வைபவ் சூர்யவன்ஷி இணையவுள்ளார். இதனால் பீகார் அணியின் கேப்டனாக அவரது பயணம் குறுகிய காலமாக இருந்தாலும், 15 வயதிலேயே சீனியர் அணியை வழிநடத்தி உலக சாதனை படைத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.



