கந்தசஷ்டி விரதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு மிகுந்த நாள் என்றாலும் மிக முக்கியமான சூரனை வதம் செய்த நாளாக தான் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் திகழ்கிறது. அதனால் தான் அந்த நாளை நாம் சூரசம்கார நாள் என்று கூறுகிறோம். தொடர்ச்சியாக ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் கூட ஆறாவது நாளான சூரசம்கார நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
முருகப் பெருமான், சூரனை வதம் செய்து, தேவர்களை காத்த நாள். கந்தசஷ்டியின் அனைத்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி திதியான ஆறாவது நாளில், ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடலாம்.
ஒருநாள் விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒருநாள் சஷ்டி விரதம் இருக்க நினைப்பவர்கள், இந்த ஆறாவது நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, காப்பு கட்டுவதாக இருந்தால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக் கொள்ளலாம். காலை 6 மணி முதல் 7 மணிக்குள் காப்புக் கட்டிக் கொண்டு அதிகாலையிலேயே விரதத்தை துவக்கி விட வேண்டும். காப்பு கட்டால் ஒரு நாள் விரதம் இருப்பவர்களும், காலையில் விரதத்தை துவக்கி விட வேண்டும். நாள் முழுவதும் தண்ணீர் தவிர உணவு ஏதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
குழந்தைக்காக அல்லது வேறு காரணத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு, மருந்து சாப்பிட வேண்டும் என்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். ஷட்கோண கோலம் அமைத்து, அதில் 6 நெய் விளக்குகள் ஏற்ற வேண்டும். ஷட்கோண கோலம் என்பது நாம் நினைத்ததை நினைத்த வண்ணம் நிறைவேற்றி தரக் கூடிய சக்தி வாய்ந்ததாகும். இன்று காலை, மாலை இரண்டு வேளையும் ஷட்கோண கோலத்தின் மீது விளக்கேற்றி வழிபட வேண்டும்.
முருகப்பெருமானுக்கு முன்பாக 6 நெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக பால் அல்லது தண்ணீரை வைத்து விட்டு “ஓம் நமோ சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் மாலை நேரத்தில் சூரசமஹாரம் நடைபெறும். சூரசம்ஹாரம் நடைபெற்ற பிறகு விரதம் இருப்பவர்கள் குளித்துவிட்டு பூஜையை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு பூஜை செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு முன்பாக சற்கோண கோலத்தில் ஆறு எழுத்துக்களின் மேல் 6 நெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் முருகனின் வேல் சிலை இருக்கும் பட்சத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை காலையிலும் மாலையிலும் கேட்பது மிகவும் சிறப்பு. மேலும் அன்றைய தினம் நம்மால் எவ்வளவு சிறப்பாக முருகப் பெருமானுக்கு நெய்வேத்தியங்களை சமர்ப்பணம் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக நம்மால் இயன்ற அனைத்தையுமே செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாலை நேரத்திலும் “ஓம் நமோ சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை நிறைவடைந்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டையும் விரதத்தையும் நிறைவு செய்து கொள்ளலாம்.
அன்றைய தினம் மௌன விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாட்டை செய்து முடித்துவிட்டு மௌன விரதத்தை தொடங்கி மாலை சூரசம்காரம் நிறைவடைந்த பிறகு வழிபாட்டை செய்து மௌன விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இப்படி சூரசம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பவர்களுக்கு காரிய தடைகள் முற்றிலும் நீங்கும், தொட்ட காரியங்களில் வெற்றிகள் உண்டாகும், மன நிம்மதி உண்டாகும்.
இன்று முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் ஆகியவை நைவேத்தியமாக படைக்க வேண்டும். முடிந்தவர்கள் 6 வகையான சாதங்களை படைத்து வழிபடலாம். ஆனால் அவற்றில் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் நிச்சயம் இடம் பெற வேண்டும். அதோடு ஒரு பெரிய டம்ளரில் காய்ச்சிய பாலுடன் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து சுவாமிக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். திருச்செந்தூரில் மாலை 4 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும் சமயம் வழிபாட்டிற்கு மிக உகந்தது.
ஒரு சிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் சாம்பார், பொரியல், கூட்டு போன்றவற்றை வைத்து இலை போட்டு, சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சூரசம்ஹாரத்தன்று மாலை நேரத்தில் முருகன் பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் தலத்திற்குரிய கந்தசஷ்டி கவசமான, சஷ்டியை நோக்க சரவண பவனார் என்ற பாடலை பாராயணம் செய்ய வேண்டும்.
இன்று முருகப் பெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷமானது. சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் முருகனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடலாம். வீட்டில் நைவேத்தியமாக செய்து வழிபட்ட சர்க்கரை பொங்கல், தயிர் சாதத்தை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு தானமாக வழங்கலாம்.
சூரசம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பவர்களுக்கு காரிய தடைகள் முற்றிலும் நீங்கும், தொட்ட காரியங்களில் வெற்றிகள் உண்டாகும், மன நிம்மதி உண்டாகும்.முருகப்பெருமானுக்கு உகந்த சூரசம்கார நாளில் முருகன் எப்படி சூரனை வதம் செய்து தேவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாரோ அதேபோல் நாமும் முருகப்பெருமானை வழிபாடு செய்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசத்தினை படித்தோ, கேட்டோ முருகப்பெருமானின் அருளை பெறுங்கள்.
