உலகின் மிகப்பெரிய மதக்குழுவாக விளங்கும் கிறிஸ்தவ சமூகத்தின் மக்கள் தொகை மையம், வரும் தசாப்தங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவை நோக்கி நகரவுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக உலகிலேயே அதிக கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடாக முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்கா, வரும் 2070-ஆம் ஆண்டில் தனது முதலிடத்தை இழக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த ‘பியூ ஆராய்ச்சி மையம்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக கிறிஸ்தவ மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கவுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 21.7 கோடி கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். ஆனால், அடுத்த 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் 4.3 கோடி குறைந்து, 2070-ஆம் ஆண்டில் 17.4 கோடியாகச் சரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2020-ஆம் ஆண்டில் 9.2 கோடியாக இருந்த காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிறிஸ்தவ மக்கள் தொகை, அடுத்த ஐந்து தசாப்தங்களில் மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்து, 2070-ல் சுமார் 29.9 கோடியை எட்டும் என அந்த ஆய்வு கூறுகிறது. இதன் மூலம் கிறிஸ்தவ சமூகத்தின் பெரும்பகுதி படிப்படியாக சப்-சஹாரா ஆப்பிரிக்கப் பகுதிகளை நோக்கி இடம்பெயர்வது தெளிவாகத் தெரிகிறது.
உலக அளவில் 2020-ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த 120 நாடுகளில், பெரும்பாலான நாடுகளில் வரும் தசாப்தங்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் மட்டும் ஒட்டுமொத்தமாக சுமார் 63 கோடி கிறிஸ்தவர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது; இது உலகளாவிய கிறிஸ்தவ மக்கள் தொகை வளர்ச்சியில் சுமார் 92 சதவீதப் பங்களிப்பாக இருக்கும்.
இந்த வரலாற்று மாற்றத்திற்குப் பின்னால் முக்கியமான மக்கள் தொகை காரணிகள் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், அங்கு பிறப்பு விகிதம் உயர்ந்திருப்பதும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. மறுபுறம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பலர், தங்களை எந்தவொரு மதத்துடனும் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத போக்கு அதிகரித்து வருவதால், அங்கு கிறிஸ்தவர்களின் விகிதம் வேகமாகக் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
