செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு துறைகளில் மனிதர்களின் வேலைகள் குறையக்கூடும் என்ற அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஏ.ஐ. நிறுவனமான ஆந்த்ரோபிக்கில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் தாவோ லின், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அதிர்ச்சிகரமான கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போதைய வேகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்தால், இன்னும் சுமார் 15 மாதங்களில் மனிதர்களை விட அதிக திறன் கொண்ட ஏ.ஐ. உருவாக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பாலிசேட் ரிசர்ச் அமைப்புக்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். மென்பொருள் உருவாக்கம், திரைப்படத் தயாரிப்பு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகின் சிறந்த நிபுணர்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அவர்களைவிட அதிக திறனுடனும் ஏ.ஐ. செயல்படக்கூடிய நிலை உருவாகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போது மனிதர்கள் செய்து வரும் பல வேலைகளை ஏ.ஐ. தொழில்நுட்பமே மேற்கொள்ளும் சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலில் மனிதர்கள் தங்களுடைய தற்போதைய வேலைகளை இழந்து வேறு துறைகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், ஆனால் அந்தப் புதிய வேலைகளையும் ஏ.ஐ. கைப்பற்றத் தொடங்கினால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பெரும்பாலான மனிதர்கள் நிரந்தரமாக வேலைவாய்ப்பை இழந்து, தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்பது அவரது கருத்தாகும். அதே நேரத்தில், உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கு அதிக காலமும் முதலீடும் தேவைப்படும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இதற்கிடையே, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்றும் தாவோ லின் வலியுறுத்தியுள்ளார். ஏ.ஐ. நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் வேகத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைத்து, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இவை தாவோ லின்னின் தனிப்பட்ட கணிப்புகளே தவிர ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணிப்பு அல்ல.
மேலும், ஏ.ஐ. அதிகம் பயன்படுத்தப்படும் பணிகளில் இதுவரை வேலையின்மை கணிசமாக அதிகரித்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் ஆந்த்ரோபிக் ஆய்வு தெரிவித்துள்ளது.
