தமிழகத்தில் காலியான சட்டசபை தொகுதிகளில் எண்ணிக்கை 6 ஆக உயர்த்துள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
* திருச்சி கிழக்கு
* பெருந்துறை
* விராலிமலை
* அம்பாசமுத்திரம்
* கரூர்
* கொளத்தூர்
இந்த தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், த.வெ.க ஆட்சி அமைத்தது.
இதையடுத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தவெக தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து, திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், அந்த தொகுதி காலியானது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற, மதுராந்தகம் – மரகதம் குமரவேல், தாராபுரம் – சத்தியபாமா, பெருந்துறை – ஜெயகுமார், அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா, கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை – சி.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.கவில் இணைந்தனர்.
இதனால், காலியான தொகுதிகள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. சமீபத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடந்தது. அதில், த.வெ.க சார்பில் போட்டியிட்டு மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். மீதமுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு, நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி வி.எஸ்.பாபு உயிரிழந்தார். இந்நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சட்டப் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 228 ஆகவும், ஆளும் தவெகவின் பலம் 108 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
