திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ கட்சியுடன் இணைந்து ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த வகையில் பயனுடையதாக இருக்கும் ? என்று இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடனும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கத்தில் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது. ஆதரவாக 298 வாக்குகளும் எதிராக 238 வாக்குகளும் பதிவான நிலையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.
இந்நிலையில் வரும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கவுள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசியலமைப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை பாஜக அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் என்பதால் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவைப்பெற பாஜக தீவிர முயற்சியில் இறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
முன்னதாக 15 ஆண்டு கால மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல்முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
மம்தாவுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட TMC சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் TMC உறுப்பினர்கள் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து மக்களவையிலும் 20 TMC உறுப்பினர்கள் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிருப்தி TMC உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பட்டியலுடன் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான சுதீப் பந்தோபாத்யாய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, 20 TMC அதிருப்தி மக்களவை உறுப்பினர்களில் 19 பேர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து தாங்கள் அனைவரும் திரிபுராவை சேர்ந்த நேஷனல் சிட்டிசன் பார்ட்டி ஆஃப் இந்தியாவுடன் (NCPI)இணையவிருப்பதையும், விரைவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கவிருப்பதையும் தெரிவிக்கும் கடிதத்தைக் கொடுத்துள்ளனர்.
20 அதிருப்தி TMC நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘என்சிபிஐ’ கட்சியுடனான உள் இணைப்பை அங்கீகரிப்பதும் அவையில் ஆளும் தரப்பு வரிசையில் (treasury benches) தனி இருக்கைகளை வழங்குவதும் சட்டப்படி மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா கையிலேயே உள்ளது.
சட்டமன்ற அல்லது நாடாளுமன்றக் குழுவை விட, அசல் அரசியல் கட்சிக்கே மேலாதிக்கம் உண்டு என்றும், அசல் கட்சியே மற்றொரு அமைப்போடு இணையும்போது மட்டுமே முறையான இணைப்பு அங்கீகரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி TMC பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
TMC யில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் பிளவு காரணமாக மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு மூன்றில் இரு பங்கு என்ற 163 எண்ணிக்கையையும், மக்களவையிலும் 313 என்ற எண்ணிக்கையையும் பாஜக கூட்டணி
பெற்றுள்ளது.
இதன் காரணமாக பல முக்கியமான மசோதாக்கள் எந்தத் தடையும் இல்லாமல் வரும் மழைக் கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
