மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலங்களவை உறுப்பினர் ராமராவ் சகாராம் வாட்குடே (வயது 72) திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள பர்பானியைச் சேர்ந்தவர் ராமராவ் சகாராம் வாட்குடே. தனது அரசியல் வாழ்க்கையை ஒன்றுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கிய இவர், கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வாட்குடே, இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி கடுமையான இருமல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், வாட்குடேவுக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மூத்த அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினருமான ராமராவ் சகாராம் வாட்குடேவின் மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
