ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகவும், வரும் மார்ச் மாதம் வரை இந்தச் சரிவு நீடிக்கும் என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார்.
வரலாற்று உச்சத்தைத் தொட்டிருந்த தங்கம் விலை தற்போது வேகமாகக் குறைந்து வருவதால், நகை வாங்க நினைப்பவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.1.34 லட்சம் வரை உயர்ந்திருந்த ஒரு சவரன் தங்கம் விலை, தற்போது ரூ.91,720 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஆனந்த் சீனிவாசன், கடந்த சில மாதங்களாகத் தான் கூறியது போலவே தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வருவதாகவும், டிசம்பர் 7, 8-ம் தேதிகளில் நடைபெறும் அமெரிக்கக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் அரை சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால்தான் தங்கம் விலை இவ்வளவு தூரம் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், வரும் மார்ச் மாதத்திற்குள் மொத்தமாக ஒரு சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், அது 1999-க்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய உயர்வாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்தால் டாலரின் மதிப்பு அதிகரித்து, முதலீடுகள் டாலர் பக்கம் திரும்பும் என்பதால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். அதேநேரம், சீனா வாங்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தும் விலைச் சரிவில் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
எப்படிப் பார்த்தாலும் வரும் மார்ச் மாதம் வரை தங்கம் விலை இதே போக்கில் குறையவே வாய்ப்புள்ளது என்றும், தோராயமாக ஒரு சவரன் ரூ.85,000 முதல் ரூ.90,000-க்குள் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளதால், நகைப் பிரியர்கள் அடுத்தடுத்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
