மாற்றத்தை ஏற்படுத்தும் மாதிரிப் பள்ளிகள்!

Estimated read time 1 min read
இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை என்பது குழந்தைகளின் அடிப்படைக் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரையிலான கட்டமைப்பை உள்ளடக்கியது.

மனப்பாடம் செய்யும் கற்றல் முறையே பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றாலும் மாணவர்களின் பொது அறிவை வளர்த்தெடுக்கவும் தனித்திறனை வெளிக்கொண்டு வரவும் செயல்வழி கல்வி எனும் புதிய கற்றல் முறை நமக்கு உதவுகின்றது.
சாதாரண கல்வி முறையில் இருந்து மாறுபட்டு நிற்கும் இம்முறையானது மாணவர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டுமில்லாமல் நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுத்தி சுயமாக கற்றுக் கொள்ள வைக்கிறது.
பாடப் பகுதிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ற வகையில் படிப்படியாக கற்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இத்தகைய கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட போதிலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.
தமிழ்நாட்டில் இது 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்பு அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வகுப்பறை சூழல் பயமின்றி இருப்பதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பர். மனப்பாடம் செய்யும் சுமையை குறைத்து மகிழ்ச்சியான வகையில் கற்க இது வழி வகுக்கிறது.
ஏதேனும் காரணத்தால் ஒரு பாடப்பகுதி விடுபட்டுப் போனால் அதை தொடர்ச்சியாகவும் எளிதாகவும் கற்கும் வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பல அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆரம்பக் கல்வியில் Montessori முறையும் மேல் வகுப்புகளில் ICSE பாடத்திட்டத்தையும் இணைத்து செயல்முறை வழிக்கல்வி வழங்கப்படுகிறது.
இது புத்தகப் படிப்பை கடந்து பிற விஷயங்களை அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பார்க்க உதவுகிறது. மாணவர்கள் தாங்களாகவே ஒரு செயலை செய்து முடிக்கும் போது அவர்களின் படைப்பாற்றல், சுய சிந்தனை மற்றும் தன்னம்பிக்கை மேலோங்குகிறது.
கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை சார்ந்த கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரத்தியேக கல்வி முறையும் நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை விளையாட்டு, பாடல்கள் மற்றும் கற்றல் அட்டைகள் மூலம் பாடம் கற்பிக்கப்படுகின்றது.
6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இசை, கலை, உடற்பயிற்சி மற்றும் சுய கற்றல் மூலம் மாற்றுக் கல்வி வழங்கப்படுகிறது. ஆரம்ப வகுப்புகளில் தேர்வுகள் மற்றும் வீட்டுப்பாடம் இன்றி, கல்வி அளிக்கப்படுகிறது.
விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் முதல் வேளாண் பள்ளி உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இயற்கையோடு இணைந்த இயல்பான சூழலில், நேரடி அனுபவங்கள் மூலம் கல்வியைக் கற்பிக்கின்றனர்.
ஆசிரியர் சொல்லும் ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடத்தை மட்டும் கவனிக்காமல் ஒரு விதை எப்படி முளைக்கிறது என்பதையும் நேரடியாக கற்றுக் கொள்கின்றனர்.
கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம் என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு இப்பள்ளி இயங்குகிறது. நாட்டின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வியை வழங்குவதில் முக்கியத்துவம் தருகின்றனர்.
ஆனால், பெண் பிள்ளைகள் வீட்டு வேலை மற்றும் விவசாய பணிகளில் உதவியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இப்பகுதியில் உள்ள சிறுமிகள் அத்தகைய சூழலில் தான் வளர்க்கப்படுகிறார்கள்.
வேளாண் சார்ந்த பள்ளிக்கல்வி அளிப்பதன் மூலம் அவர்களை வாழ்க்கைக்கு தயார்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விவசாய பெற்றோர்களுக்கும் மதிப்பு மிக்க தகவல்களை இதன் மூலம் கற்றுத் தர முடியும்.
இந்தக் கல்வி முறையானது நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அமையும். இவை தவிர மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கவும், செய்முறை பயிற்சிகளை அளிக்கவும் நவீன ஆய்வகங்களுடன் கூடிய தகைசால் பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன.
பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, உணவு பொருள் பாதுகாப்பு, போர் பதற்றம் ஆகியவற்றை உலகம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், குழந்தைகளுக்கு இந்த சவால்களை புரிந்து கொள்ளும் திறன்மிக்க கல்வியை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
S. Vaani

#செயல்வழிக்கல்வி #மாற்றுக்கல்வி #பள்ளிக்கல்வி #மாணவர்கள்திறன் #குழந்தைகள்கல்வி #சுயகற்றல் #மகிழ்ச்சிக்கல்வி #வேளாண்கல்வி #கல்விமுறை #ActivityBasedLearning #AlternativeEducation #SchoolEducation

The post மாற்றத்தை ஏற்படுத்தும் மாதிரிப் பள்ளிகள்! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author