நாளையே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Estimated read time 1 min read

மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவம்பர் 28) மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எஃப் (CRPF) பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கை நிர்வகிக்க உள்ளூர் காவல்துறை தவறிவிட்டதாகக் கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலை முழுவதையும் உடனடியாக சி.ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் ஆணையிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீதிபதிகள் நீக்கினர்.

முன்னதாக, கோயில் நிர்வாகம் மட்டும் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போது பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்ற நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும், உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடர் எடுத்துச் சென்று, நாளை (நவம்பர் 28) மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனத் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உள்ளூர் போலீஸ் தவறிவிட்டதால், கோயிலின் பாதுகாப்புப் பொறுப்பை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடனடியாக ஏற்க வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் சி.ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சி.ஆர்.பி.எஃப் வசம் சுமுகமாக ஒப்படைப்பதைத் தமிழ்நாடு டிஜிபி, ஐஜி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விசாரணையின்போது ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், கோயில் மரபுகள் மற்றும் ஆகம விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் கோயில் விஷயத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாகச் செயல்படுத்திவிட முடியாது என வாதிடப்பட்டது. இதற்கு உதாரணமாகச் சபரிமலை வழக்கைச் சுட்டிக்காட்டிய ஆட்சியர் தரப்பு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு தற்போது வரை இருக்கிறதே தவிர, அது நிர்வாக ரீதியாக நிறைவேற்றப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியது. ஆனால், மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பின் இந்த வாதத்தை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author