தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், முக்கியமான 3 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தேர்வு தேதி விவரம்
10, 11, 12-ம் வகுப்பு – டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை
6 முதல் 9-ம் வகுப்பு வரை – டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி வாக்கில் தொடங்கும்
1 முதல் 5-ம் வகுப்பு வரை – டிசம்பர் 16 முதல் 23 வரை
24-12-2026 முதல் 03-01-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து, 04-01-2027, திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கும். பள்ளிகள் திறக்கும் அன்றே, 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி, உரிய பதிவேடுகளில் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் இது பொருந்தும்.
