கொளத்தூரில் கார்த்திக் மோகன் போட்டியா?- கனிமொழி, எழிலன், மேயர் பிரியா இடையே கடும் போட்டி

Estimated read time 1 min read

சென்னை கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் தான் இப்போது தமிழக அரசியலின் மையப்புள்ளி. திமுக தலைமைக்கு இது வெறும் ஒரு தொகுதி தேர்தல் இல்லை. கட்சியின் கௌரவத்தை மீட்க வேண்டிய தேர்தல்.

கொளத்தூர் என்றாலே ஸ்டாலின் தொகுதி என்று தான் அனைவரும் சொல்வார்கள். 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை அவர் அங்கு வெற்றி பெற்றார். ஆனால் 2026 பொதுத்தேர்தலில், முதல்வராக இருந்தபோதே, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

அந்த தோல்வியின் வலி இன்னும் திமுகவுக்கு மறையவில்லை. இப்போது வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் கடந்த நவ.20-ம் தேதி காலமானதால், அந்த தொகுதி காலியாகி, மீண்டும் இடைத்தேர்தல் வருகிறது. தோற்ற தொகுதியை மீட்போமா? இல்லை மீண்டும் தோற்றுவிடுவோமா? என்ற பதற்றம் திமுக தலைமையிடம் தெரிகிறது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒரு பக்கம் “நீங்கள் தான் நிற்க வேண்டும், நீங்கள் சட்டசபைக்குள் வந்தால் தான் விஜய் அரசை கட்டுப்படுத்த முடியும்” என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் வேறு மூத்த தலைவர்கள் “வேண்டாம் தலைவரே, மீண்டும் தோற்றால் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும். ஒரு தொகுதிக்காக 6 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை விட்டுவிடாதீர்கள்” என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதனால் தான் ஸ்டாலின் முடிவெடுக்காமல் தயங்குகிறார் என்று கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த குழப்பத்தில் தான் கார்த்திக் மோகன் பெயர் வந்துள்ளது. அவர் யார்? அண்ணாநகர் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனின் மகன். உதயநிதிக்கு நெருக்கமானவர். 2026-ல் வில்லிவாக்கம் தொகுதியில் முதன்முறையாக களம் கண்டார். அங்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனாவிடம் 66,445 – 49,143 என 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

கார்த்திக் மோகன் மட்டும் இல்லை. இந்த பட்டியலில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, டாக்டர் எழிலன் நாகநாதன், மேயர் பிரியா, டாக்டர் யாழினி உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனை பட்டியலில் உள்ளது. ஸ்டாலின் – உதயநிதி இடையே நடக்கும் ஆலோசனைக்கு பிறகு தான் இறுதி முடிவு வரும்.

Please follow and like us:

You May Also Like

More From Author