அருள் விக்னேஷை வீட்டில் புகுந்து தூக்கிய போலீஸ்! 117 நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!!

Estimated read time 1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டரான ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

விசாரணை அதிகாரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார், கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவரை கைது செய்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு, அந்த தொகுதியின் தவெக MLA அருள் விக்னேஷ் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 117 நாட்களுக்கு பிறகு தான் இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த புகாரை தவெகவினர் மறுத்து வந்தனர். கலெக்டரும் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், MLA-வை கைது செய்து, பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தின.

இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஆர். திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து, ஆளும் தவெக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதன் பிறகு தான் வழக்கில் வேகம் வந்தது. கடந்த நவம்பர் 23-ம் தேதி பெண் கலெக்டர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சில பிரிவுகள் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை பொறுப்பு, நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐ.ஜி. காமினியின் மேற்பார்வையில் விசாரணை நடந்து வந்தது. 2 நாட்களாக அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். பதவியை ராஜினாமா செய்வாரா, கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author