Web team
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மகன் திருமணத்திற்கு அம்மா ,வந்தவர்களுக்கு தேங்காய் ,மாம்பழம் தந்து இருந்தால் சில நாளில் மறந்து இருப்பார்கள் .தான் எழுதிய காதல் கவிதைகளைத் தொகுத்து “காதல் தொகை ” எனும் நூலாக்கி வழங்கியது .புதுமை எங்கும் கேள்விப்படாத நிகழ்வு எனக்கு வியப்பைத்
தந்தது .நூலின் கவிதைகளைப் படித்து அசந்து போனேன் ,புதுக் கவிதையின் தாத்தா மேத்தா அவர்களைப் போன்று கவிதை வடித்து இருந்தார்கள் .இந்நூல படித்ததும் என்னூல் என்னவள் நினைவிற்கு வந்தது .அம்மா மகன் , மருமகளுக்கு வழங்கிய காதல் கவிதை நூல் இதுவே முதன்மையாக இருக்கும் .அட்டைப்பட வடிவமைப்பு, அச்சு யாவும் நன்று .கையேடு போல நூலால் முடிந்து வாசித்து விட்டு பாதுகாக்கும் .உணர்வைத் தரும் வகையில் உள்ளது ,பாராட்டுக்கள் .
அன்றும் இன்றும் என்றும் காதல் வாழ்கின்றது .காதல் கவிதைகள் படிக்க , படிக்கும் வாசகர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்வித்து விடும் .என்பது உண்மை .
காதலின் மேன்மையை மென்மையாக உணர்த்தும் விதமாக கவிதைகள் உள்ளன .
இனிது ! இனிது !
காதல் இனிது !
உணர்வில் பிறந்து !
அறிவில் வளரும்போது !
காதல் காதலரை என்னவெல்லாம் செய்யும் என்பதை பட்டியலிட்டு ,காதலித்த அனுபவம் உள்ளவர்கள் ஆம்! உண்மை ! என்று ஆமோதிக்கும் விதமாக கவிதைகள் உள்ளன .
காதல் உன்னைக் கிள்ளும்
மோதி மெல்லத் தழுவும்
காதல் உன்னைக் கொஞ்சும்
தீயாய் உன்னுள் மலரும்
கொஞ்சம் அறிவை மயக்கும்
காதலுக்கு வேண்டும் ! வேண்டும் !
வேகக்கட்டுப்பாடு !
கவிதையில் கடைசி வரி முத்தாய்ப்பு .
நூலில் பிடித்த கவிதைகளை மேற்கோள் காட்ட மடித்து வைத்துக் கொண்டே வந்தேன் .
கடைசியில் எல்லாப் பக்கத்தையும் மடித்து வைத்து விட்டேன் .நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .காதலர்கள் விரும்பி வாங்கிப் பரிசளித்து மகிழும் கவிஞர் தபூ சங்கர் கவிதைகள் போல உள்ளது , ஆண்கள் பலர் காதல் கவிதைகள் எழுதுவார்கள் .ஆனால் பெண்கள் காதல் கவிதைகள் சிலர் மட்டுமே எழுதுவார்கள் .அவற்றில் நூலானது மிகச் சிலதான் .சங்கால பெண்பாற்ப் புலவர்களான அவ்வை ,காக்கைப்பாடினியார் போல நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் தலைவன் ,தலைவி கூற்றுப் போல ,சங்க இல்லகியம் போல எழுதி உள்ளார்கள் .
.
காதல் வயப்பட்ட இளைஞன் நெறிப்படுதப்படுவான் ,புயலாய்த் திரிந்தவன் தென்றலாய் மாறுவான் .உலக இயல்பை ,காதல் விளைவை உணர்த்தும் கவிதை .
ஒருத்தி ஒருவனை நினைப்பது காதல் !
ஒருவன் உருப்படுவது அந்த ஒருத்தியால் !
கவிதைகள் இரண்டே வரிகளில் சொற்ச் சிக்கனத்துடன் சுவையாக உள்ளன .வாசகர்களை திரும்பத் திரும்ப வாசித்து வைத்து அவரவர் காதலை அசைபோட வைத்து நூல் வெற்றி பெறுகின்றது .
சந்தித்தும் பேசுகின்றன !
வாய்களல்ல நம் கண்கள் !
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் .ஆனால் காதல் கண்களில்தான் தொடங்குகின்றது .காதலர்கள் இதழ் அசைத்துப் பேசுவதை விட விழிகளால்தான் அதிகம் பேசுகிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மை .
தலைவியின் கூற்றாக உள்ள கவிதை மிக நன்று .வித்தியாசமாக உள்ளது .
நீ என்னை காதலிக்க
நான் அழகி ஆனேன் !
நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் சவூதி அரேபியாவில் வாழ்ந்தாலும் ,அமெரிக்க உள்பட பல நாடுகள் சென்றபோதும் .நம் தமிழை ,தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் இலக்கிய உலகில் கவிதை ,கதை ,கட்டுரை எழுதி நூலாக்கி வருவது சிறப்பு .எது காதல் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளன .காதல் எப்படி இருக்க வேண்டும்.என்று உணர்த்தும் விதமாக உள்ளன.காதல் சாதனை புரிந்திட உதவும் என்பதை உணர்த்தும் கவிதை .
காதல் வயப்பட்டால்
கனவு சுகப்பட்டால்
கண்ணை மூடிக் கொண்டு
சாகசமும் நடத்தலாம்
சாதனையும் புரியலாம் !
காதலிக்கும் காதலனுக்கு மனத்துணிவு வந்து விடும் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடியதுப் போல .காதலி கடைக்கண் காட்டி விட்டால் ,காதலனுக்கு பெரிய மழையும் சிறிய கடுகுதான் என்பதை வழிமொழிந்து எழுதியுள்ள கவிதை .இரண்டே வரிகள்தான் ஆனால் அதன் அதிர்வுகள் அதிகம் .
முடியாது என்பது கிடையாது !
காதல் அகராதியில் !
காதல் கவிதைகளில் முத்தம் பற்றிய கவிதை இன்றி முழுமை பெறாது .முத்த க்கவிதைகள் நூலில் உள்ளன .
காதலில்
ஒரு முத்தம்
பல யுத்தம் புரியும் !
பூகம்பமா ?
உன் முத்தம்
என்னுள் உயிர் நடுக்கம் !
சொல் விளையாட்டு உள்ள கவிதையில் அன்பின் மேன்மை உணர்த்தி உள்ளார்கள் .
உன் பரிசம் எனக்குப் புதிதல்ல !
உன் பாசமே எனக்குப் பெரிது !
நூலில் உள்ள 74 கவிதைகளும் குட்டிக் குட்டியாய் , காதல் கட்டித் தங்கமாய் படிக்கும் வாசகர்கள் மனதை தொட்டு விடும் விதமாக உள்ளன .
நூலின் பின் அட்டையில் உள்ள கவிதை மிக நன்று .
அகமாய் இதயம் நுழைந்தவளே !
புறமாய் வளம் வருபவளே !
இனி நீயும் நானும் வேறல்ல இலக்கியம் !!
திருமணத்தில் இலவசமாக இந்நூலை வாங்கிச் சென்ற அனைவருமே படித்து விட்டு பத்திரப்படுத்தி வைத்து இருப்பார்கள் என்று உறுதி கூறலாம் .இந்நூலில் ஓவியங்கள் இல்லாதது ஒரு குறை ..ஓவியங்களுடன் இக்கவிதைகள் நூலாக்கி விற்பனைக்கு அனுப்பலாம் ,ஓய்வின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணிஅவர்களுக்கு பாராட்டுக்கள்,