திருப்பரங்குன்றம் : மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவினை அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று தான் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் அறிவுறுத்தியிருந்ததாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அதனை அரசு செயல்படுத்தத் தவறியதால், இன்று உச்சநீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகத் திருப்பரங்குன்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எஃப் (CRPF) வசம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்துள்ளதையும், அறங்காவலர் குழுவையே கலைத்துவிட்டுத் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள “Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts” (நிர்வாகக் குழப்பம், அப்பட்டமான மற்றும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமை, அரசியலமைப்பு நீதிமன்றங்களைத் திட்டமிட்டு அவமதித்தல்) ஆகிய சொற்களை எடப்பாடி பழனிசாமி மேற்கோள் காட்டியுள்ளார்.
அத்துடன், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” (தற்போதைய சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டும்; தவறினால் அது அரசியலமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்) என நீதிமன்றம் எச்சரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு மாநில அரசை நோக்கி இவ்வளவு காட்டமான வார்த்தைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இப்படி ஒரு அவலநிலை நம் மாநிலத்திற்குத் தேவையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகச் சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியுள்ள தவெக அரசுக்குத் தனது கடும் கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
சட்டம், அரசியலமைப்பு மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை மிகுந்த மாண்புக்குரியவை என்று வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அவை சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் ‘விண்ட்மில்’ (Windmill), கார் பொம்மைகளைப் போன்றவை அல்ல என்பதை முதலமைச்சர் விஜய் உணர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் முறையாகக் கலந்தாலோசித்து உரிய சட்டப்பூர்வத் தீர்வு காண வேண்டும் என ஆளும் தவெக அரசை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
