ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படி 63% ஆக உயர்வு.!!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) கடந்த 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இத்திட்டத்திற்கான விரிவான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை, 2026 ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திரத் தொகை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 10,000, இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதனுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டு வந்தது.

அதேபோல், 2026 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்தால், அவருக்குக் கிடைக்க வேண்டிய இடைக்கால மாதாந்திரத் தொகையில் 60 சதவீதம் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்பத் தொகையாக வழங்கப்படுகிறது. பணியில் இருக்கும்போதே உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் இடைக்கால குடும்பத் தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் 63 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, TAPS திட்டத்தின் கீழ் இடைக்கால ஓய்வூதியம் மற்றும் குடும்பத் தொகை பெறுவோருக்கான அகவிலைப்படி நிவாரணத்தையும் 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்த அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உயர்வின் காரணமாக 2026 ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அந்த மாதங்களில் இடைக்கால ஓய்வூதியம் அல்லது குடும்பத் தொகை பெறத் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த உயர்வுக்கான கூடுதல் செலவினம், இடைக்காலத் தொகைக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும். நிலுவைத் தொகையைத் தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கும், அரசாணையை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில், TAPS திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தற்போது வழங்கப்படும் இடைக்காலத் தொகை, அந்த திட்டத்தின் கீழ் இறுதியாகக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களுடன் சரிசெய்யப்படும். தேவைக்கேற்ப ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகை நிலுவையாகக் கணக்கிடப்படலாம் அல்லது கூடுதலாக வழங்கப்பட்ட தொகை வட்டியுடன் வசூலிக்கப்படலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author