சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 21ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் இருந்து, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை பற்றிய பிரிக்ஸ் சிறப்பு காணொளி உச்சிமாநாட்டில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.
பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கு முதலில் வரவேற்பு தெரிவித்த ஷி ச்சின்பிங், நடப்புக் கூட்டத்துக்கு முயற்சி மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போதைய நிலைமையில், பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை குறித்து பிரிக்ஸ் நாடுகள் நீதி சார்ந்து அமைதியான குரலை எழுப்புவது காலத்துக்கு ஏற்றதாகவும் முக்கியமானதாகவும் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
காசா பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து வரும் மோதல் நிலைமை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சீனா கவலைப்படுகிறது. முதலில், போதலில் சிக்கியுள்ள தரப்புகள் உடனே போர் நிறுத்தம் செய்து, அப்பாவி மக்கள் மீதான வன்முறை செயல் மற்றும் தாக்குதலை நிறுத்தி, பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இரண்டாவதாக, மனிதநேய உதவிப் பாதையை உத்தரவாதம் செய்து, காசா மக்களுக்கு மேலதிக உதவிகளை வழங்க வேண்டும். மூன்றாவதாக, சர்வதேச சமூகம் நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மோதல் விரிவாவதைத் தடுக்க வேண்டும். இவை தற்போதைய அவசியமாகும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்கு, இரு நாடு திட்டத்தை நடைமுறைப்டுத்தி, பாலஸ்தீனத்தின் சட்டப்பூர்வ உரிமை நலன்களை மீட்டெடுத்து, சுதந்திர பாலஸ்தீன நாட்டை நிறுவ வேண்டும். பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்காமல் இருந்தால், மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நடப்பு மோதல் ஏற்பட்ட பிறகு, அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்தத்தை முன்னேற்ற சீனா ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. 20 லட்சம் அமெரிக்க டாலர் அவசர மனிதநேய உதவியையும் 1 கோடியே 50 லட்சம் யுவான் மதிப்புள்ள உதவிப் பொருட்களையும் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு, மனிதநேய உதவி உள்ளிட்டவற்றுக்காக ஐ.நா. பாதுகாப்பவையின் நடப்பு தலைமைப் பதவியில் இருக்கும் சீனா கோரிக்கைகளை விடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.