இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என். 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் வேகமாக கொரோனா பரவி வருகிறது. அந்தவகையில் கடந்த 28 நாட்களில் உலக அளவில் 52 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 333 பேர் மீண்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 71 ஆயிரத்து 545 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 220 கோடியே 67 இலட்சத்து 79 ஆயிரத்து 81 டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.