கோடைக்கால தாவோஸ் மன்றத்தின் 14ஆவது ஆண்டுக் கூட்டம் 3 நாட்கள் நீடித்து 29ஆம் நாளன்று சீனாவின் தியான்ஜின் நகரில் நிறைவுபெற்றது.
பல நெருக்கடிகளால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்னணியில், இவ்வாண்டின் கூட்டம், சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்தது என்று பன்னாட்டு ஊடகங்களில் கருத்து எழுந்துள்ளது. வியட்நாம் தலைமை அமைச்சர் ஃபாம் மின் சென் கூட்டத்தில் கூறுகையில், உலக ஒற்றுமையை வலுப்படுத்தி, பலதரப்பு வாதத்தை முன்னேற்றி, மக்களே முதன்மை என்ற வளர்ச்சிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்றும், உலகளாவிய அறைகூவலை எந்த ஒரு நாடும் தனியாகச் சமாளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான க்லாஸ் ஸ்வாப் மன்றக்கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில், உரை நிகழ்த்துகையில் கருத்து வேற்றுமையைக் களைந்து, பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க உலக நாடுகள் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.