எம்.ஜி.ஆர் வழியில் விஜய்? தவெக கொடிப் பாடலில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்!

Estimated read time 1 min read

சென்னை : தவெக கட்சியின் கொடிப் பாடலை இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் வரிகளில் உள்ள விளக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் விழாவானது இன்று காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்டது. இந்த விழாவானது பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர். விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் முதன்முதலாக தவெக கட்சி தொடர்பான விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், தவெக கட்சியின் கொடியை அறிமுகம் செய்ததுடன், கொடிப் பாடலையும் வெளியிட்டார். அந்தப் பாடலை இசையமைப்பாளர் தமன் இசையமைத்ததாகவும், பாடலாசிரியர் விவேக் இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பாடல் முழுவதும் 3டி கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் கருப்பு யானைகள் மீது அமர்ந்தபடி சிலர் மக்களைத் துன்புறுத்துகின்றனர்.

அப்போது கையில் காப்புடன் குதிரையில் வரும் விஜய் போன்ற ஒருவர், தனது இரு யானைகளின் மூலம் அந்த கருப்பு யானைகளை வீழ்த்துகிறார். அந்த பாடலில், “தமிழன் கொடி பறக்குது”, “தலைவன் யுகம் பிறக்குது”, குறிப்பாக “மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற வரிகள் அப்பாடலில் வருகின்றன. இதில் அந்த மூணெழுத்து மந்திரம் என்பது இது தமிழக முன்னாள் முதல்வர் ‘எம்ஜிஆர்’-யை குறிக்கும்படி அமைந்துள்ளது.

அது ஏனென்றால் 1964-ம் ஆண்டில் எம்.ஜி,ஆர் நடிப்பில் வெளியான ‘தெய்வத்தாய்’ படத்தில் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ எனும் பாடலை இது குறிப்பிடுவது போல் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆரும் சினிமாவிலிருந்து அரசியலில் வந்தவர் ஆவார், விஜயும் சினிமாவிலிருந்து அரசியல் களத்தில் குதித்துள்ளார். இருவரின் பெயர்களும் ‘மூன்றெழுத்து’ தான், என அந்த வரிகள் கூறுவது இதுதான் என கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும், அந்த வரிகள் வரும் பொழுது இடது பக்கத்தில் எம்.ஜி.ஆரின் நிழல் உருவமும், வலது பக்கத்தில் அண்ணாவின் நிழல் உருவமும், நடுவில் இருப்பது போல ஒரு காட்சி அமைத்துள்ளனர். அதன் பின், “சிகரம் கிடைச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு, நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது” என்ற வரிகளின் மூலம் சினிமாவில் பல கோடிகள் வருமானத்தை விட்டு அரசியலுக்கு வந்து சேவை செய்யவுள்ளேன் என்பதை இதில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

பாடலின் நடுப்பகுதியில் தவெக கட்சிக் கொடியை ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவன் ஏந்தி நிற்பதைப் போல ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதங்களைத் தாண்டி அனைவருமே சமம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த பாடலின் மூலம் தெரிவித்துள்ளார் விஜய்.

“அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”, “தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது” உள்ளிட்ட வரிகள் மேற்கொண்டு இளைஞர்களைச் சிந்திக்க வைக்கிறது. இப்படி பல வரிகள் பேசவைப்பதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. தவெக கட்சியின் இந்தக் கொடிப் பாடலானது, தவெகவின் யூட்யூப் சேனலில் வெளியாகி தற்போது 1 லட்சத்தி 60 ஆயிரம் பார்வையாளர்களை தாண்டியும், மேலும் சமூக வலைத் தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author