நான் போட்டியிடும் தொகுதி இது தான் – துரைமுருகன் பேச்சு..!

Estimated read time 1 min read

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மகிமண்டலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.3.48 கோடி மதிப்பிலான உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர், இப்பகுதிக்கு அரசு மருத்துவமனை, கல்லூரி மற்றும் தரமான சாலை வசதிகளைத் திட்டமிட்டுச் செய்து வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காகச் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வரப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அவர், மக்கள் கேட்காமலேயே மகளிர் இலவச பேருந்து, காலை உணவுத் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்கி வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், தேர்தல் முடிந்தாலும் மீண்டும் திமுக ஆட்சியே அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வயது மூப்பு காரணமாக வரும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காட்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதையும், அப்பகுதியில் பெரிய தொழிற்பேட்டையை உருவாக்குவதே தனது கனவு என்பதையும் தனது பேச்சின் மூலம் அவர் உறுதிப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் சுவாரசியமாக, கோயில் கட்ட நிதி கோரிய ஊராட்சி மன்றத் தலைவரிடம் நகைச்சுவையுடன் பேசிய அமைச்சர், “தற்போது நிதி கேட்க இது நேரமல்ல, தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடன் கண்டிப்பாகச் செய்கிறேன்; நமக்குள் ஒரு அக்ரிமெண்ட் போட்டுக் கொள்வோம்” என்றார். தான் செய்யத் தவறினால் தெய்வம் தனக்குக் கூலி கொடுக்கும் என்றும், மக்கள் ஓட்டுப் போடாவிட்டால் தெய்வம் அவர்களுக்குக் கூலி கொடுக்கும் என்றும் அவர் சிரித்தபடி கூறியது அங்கிருந்தவர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

Please follow and like us:

You May Also Like

More From Author