சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை என்றும், அவர் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் (NDA) தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி தரப்பு கதவுகளை மூடிவிட்டதாலும், தேனி மாவட்டத்தில் இருந்த பல ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டதாலும் ஓபிஎஸ் அரசியலில் தனித்துவிடப்பட்டதாகப் பேச்சுக்கள் எழுந்தன.
இந்தச் சூழலில், “ஓபிஎஸ் எங்களுடன் தான் இருக்கிறார், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது” என்று அண்ணாமலை கூறியிருப்பது, என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் மீண்டும் முக்கியத்துவம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கமல்ஹாசன் மற்றும் விஜய் குறித்தும் அண்ணாமலை தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை கமல்ஹாசன் தவறாகப் புரிந்து கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், தவெக தலைவர் விஜய் தனது கொள்கைகளை மக்கள் முன் வைக்கட்டும் என்று கூறினார்.
அரசியலில் ஒரு நாகரிகம் இருப்பதாகவும், ‘லட்சுமண ரேகையை’ விஜய் தரப்பு தாண்டக்கூடாது என்றும் அண்ணாமலை எச்சரித்தார். ஓபிஎஸ் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்துத் தை மாதத்தில் அறிவிப்பதாகச் சொல்லியிருந்த நிலையில், அண்ணாமலையின் இந்த ஆதரவான பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
