தமிழகத்தில் திமுக கூட்டணி சிதறி வருவதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. ஆனால், திமுகவின் கூட்டணி தற்போது உதிரியாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மீது அவரது கட்சியினருக்கே நம்பிக்கை போய்விட்டது. அமைச்சர்களே அரசு விழாவைப் புறக்கணிக்கும் நிலை உள்ளது. திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியேறத் தயாராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் ‘விசில்’ ஊதிவிட்டு வெளியேறக் காத்திருக்கிறது. திமுகவை வேண்டாமென நினைப்பவர்கள் பாஜக – அதிமுக தலைமையிலான கூட்டணியை நாடலாம்.
விருதுநகரில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி மாநாடு குறித்துப் பேசிய அவர், “காமராசரை அசிங்கமாகப் பேசி தோற்கடித்த திமுகவினர், இன்று அவர் பிறந்த மண்ணில் சென்று மாநாடு நடத்துவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் போதை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் கையில் கத்தி வைத்திருக்கும் சூழல் நிலவுகிறது. சமூக நீதி பற்றிப் பேச திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை” என்றார்.
கூட்டணி கட்சிகளின் சின்னங்களை வைத்து தமிழிசை கோர்வையாக விமர்சித்தார். “திமுகவின் சூரிய ஒளி மக்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை. ஆனால், நாங்கள் இரட்டை இலை போட்டு, குக்கரில் சாதம் செய்து, மாம்பழம் வைத்து, சைக்கிளில் சென்று மக்களுக்குக் கொடுத்து, அவர்கள் முகம் தாமரை போல் மலர்வதைப் பார்ப்போம். நீங்கள் வெறும் பானையை வைத்துக்கொண்டு கையசைத்துவிட்டுப் போகப் போகிறீர்கள். அதனால்தான் பானைகளும் (விசிக), கைகளும் (காங்கிரஸ்) உங்களை விட்டு ஓடத் தயாராக உள்ளன.
மத்திய அமைச்சர் அமித் ஷா இப்போதைக்குத் தமிழகம் வரவில்லை என்றாலும், திமுகவிற்கு ஆட்டம் காண்பிக்க அவர் நிச்சயம் வருவார். மேலும் பிரதமர் மோடியைத் தாக்க முயன்ற சம்பவங்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கவில்லை; இது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என்றும் அவர் சாடினார்.
