அதிமுக வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் வி.எஸ். பாபு, சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதாவது சென்னை புரசைவாக்கம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வாக இருந்த வி.எஸ். பாபு, வடசென்னை திமுக மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தவர். பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவருக்கு, வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. எனினும், கட்சி மேலிடத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வி.எஸ். பாபு இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
“அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. அங்கு எனக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கட்சியை வழிநடத்தும் ஆளுமைத் திறன் இல்லை என்று கூறினார்.
அதிமுகவிலிருந்து அண்மைக் காலமாக முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வி.எஸ். பாபு போன்ற செல்வாக்குள்ள நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிச் செல்வது சென்னை அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
