தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், ஆளும் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு அதிகார பங்கீடு செய்வது என்பது அரிதாகவே நடைபெறுகிறது.
அதிமுகவோ, திமுகவோ ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுப்பது என்பது நடைபெறுவதில்லை. செல்லூர் ராஜு போன்ற தலைவர்கள் கூட, கூட்டணி கட்சிகளுக்கு அதிகார பங்கீடு செய்வது நல்லாட்சிக்கு எதிரானது என்கின்றனர்.
இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் செல்லூர் ராஜு கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு எதிரியை திமுக மட்டும் தான். மற்றபடி நாங்கள் யாரையும் பொருட்படுத்துவது கிடையாது. அதிமுக ஒரு வலிமையான இயக்கம். திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வராது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக என்ற இரு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி புரிய முடியும். வேறு எந்த கட்சிகளும் ஆட்சிக்கு வர முடியாது. அதன் பிறகு தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடம் கிடையாது. இந்த விஷயத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளது. இதற்கு பல மாநிலங்கள் உதாரணம். கூட்டணி ஆட்சி அமைத்த மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் என்ன நிலைமை இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்ட நிலையில் அதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சீமான் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.