மக்களும் நாமும் ஒன்றாக இருப்பதால்தான் வெற்றியும் நம்முடன் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிட்டதா எனக் கேட்டால்… இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை! நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையில்தான், தமிழ்நாட்டை எல்லா விதங்களிலும் முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.
பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கை என்பது, நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று! தலைவர் கலைஞர் எளிமையாகச் சொன்னார்…“நாம் கோட்டையில் இருந்தாலும் – அங்கே இருக்கும் புல்லை வெட்டக்கூட உரிமை இல்லை”என்று சொன்னார்.
இன்றைக்குக் க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஒரு அறிவிப்பைத்தான் இந்த பவள விழா செய்தியாகச் சொல்ல விரும்புறேன்…
குறைவான நிதிவளத்தைக் கொண்டே, நம்மால் இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதிவளம் கிடைத்தால், தமிழ்நாட்டை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்ட நம்மால் முடியும்! எனவே, எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்! மாநில உரிமைகளுக்காகவும் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகவும் இந்தியாவில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஒரே இயக்கம், நம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்!
ஏனென்றால், மக்களுக்கு நாம் உண்மையாக இருக்கிறோம். அதனால்தான், மக்கள் எப்போதும் நம்முடன் இருக்கிறார்கள். மக்களும் நாமும் ஒன்றாக இருப்பதால்தான் வெற்றியும் நம்முடன் இருக்கிறது. நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்! உங்களால் நான் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்கப்பட்ட பிறகு, எதிர்கொண்ட எல்லாத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.
நான் என்றால் தனிப்பட்ட ஸ்டாலின் இல்லை. ஸ்டாலின் என்ற ஒற்றைப் பெயருக்குள், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பும் – ஆற்றலும் அடங்கி இருக்கிறது. இந்த வெற்றிகள் எல்லாம், உங்கள் உழைப்பால் – உங்கள் தியாகத்தால் – உங்கள் செயல்பாடுகளால் – உங்கள் நடவடிக்கைகளால்தான் சாத்தியமாயின.
இதுவரை நடந்த தேர்தல்களைப் போலவே, அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஏதோ ஆணவத்தில் நான் இதைச் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் சொல்கிறேன். அதற்காக மெத்தனமாகவும் யாரும் இருந்துவிடக் கூடாது. இருக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
எந்த இயக்கமாக இருந்தாலும் அதற்குக் கொள்கை தேவை. அதைச் செயல்படுத்தும் வீரர்கள் தேவை. வழிநடத்தும் தலைமை தேவை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தித்திக்கும் திராவிடக் கொள்கை இருக்கிறது. கொள்கையைக் காக்கும் படையாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கிறது. நமது தொடர் வெற்றிகள் மூலமாக நூற்றாண்டு விழாவை நோக்கி முன்னேறுவோம்! அடுத்து நமது இலக்கு 2026 தேர்தல். இதுவரை இப்படியொரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றதில்லை என 2026-இல் வரலாறு சொல்ல வேண்டும்! அந்த வரலாற்றை எழுதுவதற்கு நீங்கள் தயாரா? இந்த உணர்வு வெற்றிச் சரிதமாக மாற வேண்டும். அதற்கு இந்த முப்பெரும் விழாவில் உறுதியேற்போம்! உறுதியேற்போம்! உறுதியேற்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.