காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
மொத்தம் 219 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 7 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் 3276 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் (காலை 11 மணி நிலவரப்படி) 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். அடுத்த கட்ட தேர்தல் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி 26 தொகுதிகளில் நடைபெறும். மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
ஜம்மு – காஷ்மீரில் 2014-க்கு பிறகும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.