இவனும் அவனும்

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

இவனும் அவனும் !
(சிறுகதைகள்)
நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிவாசகர் பதிப்பகம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608 001.
விலை : ரூ. 90, பக்கம் : 176

*****

நூல் ஆசிரியர் முதுபெரும் எழுத்தாளர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார். இவர் போல மற்ற ஆண்களும், மனைவியை நேசிக்க முன்வர வேண்டும். முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர். தன்னுடைய பெயருக்கு முன்பாக மனைவியின் பெயரை இணைத்துக் கொண்டவர். மனைவி மறைந்திட்ட போதும் அவர் நினைவாக பொன்மாலை அறக்கட்டளை தொடங்கி மாணவ, மாணவியருக்கு உதவி வருபவர்.

தனக்கு கிடைக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம். என் மனைவிக்கும் சேர்த்துத் தான் தருகிறார்கள். அவள் இப்போது உயிரோடு இல்லாத காரணத்தால், ஓய்வூதியத்தில் பாதி அவளுக்கானது. எனவே அத்தொகையை ஏழை மாணவ, மாணவியருக்காக உதவி வருகிறேன் என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.

இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் இக்காலத்தில் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் போன்ற நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்பது ஆறுதல் .மகாகவி பாரதி சொல்வான் கவிதை எழுதுபவர் கவிஞர் அல்ல கவிதையில் எழுதியபடி கவிதையாகவே வாழ்பவரே கவிஞர் என்று .அறம் சார்ந்து எழுதுவதோடு நின்றுவிடாமல் அறம் சார்ந்து வாழ்வது சிறப்பு .படைப்பாளிகள் இவரைப் பாடமாகக் கொள்ள வேண்டும்.

மதுரையில் இலக்கிய விழா எங்கு நடந்தாலும், பார்வையாளராக முதல் வரிசையில் வந்து அமர்ந்து விடுவார். என்னுடைய கவியரங்கம் பல கேட்டு, கை தட்டி மகிழ்ந்து உள்ளார் . நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் உடல்நலம் குன்றி உள்ளார். அவரால் வெளியே வர இயலாது என்றனர். இந்த நூல் வெளியீட்டு விழாவை அவரது இல்லத்திலேயே ஏற்பாடு செய்து இருந்தார்கள். எழுத்தாளர்கள் திருச்சி சந்தரும், கர்ணனும் மற்றும் பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். எல்லோரையும் பார்த்த மகிழ்வில் நூலாசிரியர் விரைவில் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை வந்தது.

இந்த நூலில் 25 முத்திரைக் கதைகள் உள்ளன. பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகளைத் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் மூலம் நூலாக வெளிவர உதவியவர் எழுத்தாளர் கர்ணன். அணிந்துரையும் தந்துள்ளார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்ற போதும் சக எழுத்தாளரான நூல் ஆசிரியருக்கு முதுமையில் உதவி உள்ளார், பாராட்டுக்கள்.

நூலாசிரியர் மனைவி மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவரது மனைவி 27.03.2002 அன்று உலகை விட்டு மறைந்திட்ட போதும் இன்றும் மனைவி பற்றி ஏதாவது பேச நேர்ந்தால் கண்கலங்கி விடுவார். தினமும் மனைவி படத்தின் முன்பு அமர்ந்து வணங்கி பேசி வருகிறார் .மற்ற ஆண்களுக்கு பாடமாக வாழ்ந்து வரும் மாமனிதர். இந்த நூலை அஞ்சலி செய்துள்ள விதத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இந்நூல் ஹேமாவுக்கு அஞ்சலி.

தாரமாய், தாயாய் உற்ற நல் தோழியாய்,
தடம்பதித்தாள் என் வாழ்வில் அரை நூற்றாண்டு
சில ஈரங்கள் காய்வதில்லை நெஞ்சில் போல
பல உறவுகளும் ஓய்வதில்லை, உன்னில் போல !

முதல் கதையின் தலைப்பையே, நூலின் தலைப்பாக வைத்துள்ளார். சிறுகதைகள் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. சிறுகதைகள் எழுத வேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அவசியம் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். கதையில் சென்னை மொழி, மதுரை மொழி, ஏழ்மை மொழி என எல்லா மொழியிலும் கதைகள் உள்ளன. சமுதாயத்தை உற்று நோக்கி வடித்த கவிதைகள் நன்று. கதைகள் மூலம் வாழ்வியல் கருத்துக்களை மிக மென்மையாக உணர்த்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர்.

இக்கதைகள் பல வருடங்களுக்கு முன்பு எழுதியவை என்ற போதும் இன்றும் பொருந்துவதாகவே உள்ளது. முதல் கதையான இவனும், அவனும் கதையில் இருந்து சில வரிகள் இதோ!

“எதிரே ஏதோ அரசியல் கட்சியின் கூட்டம். மேடையும், மைக்கும் கிடைத்தவர்கள் தங்களைத் தர்மபுத்திர்களாகவே உருவகிக்கும் வழக்கமான
காட்சியை ஜோடனைகளுடன் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். எதிர்கட்சியினரின் ஊழல்கள் பற்றிய பட்டியல் நீண்டு கொண்டிருந்த்து. தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே எவ்வளவு நாணயமற்றவர்கள் என்று நிரூபிக்க்ச் சிரமமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அங்கீகரிப்பது ஒரு கடமை என்பது போல, எதிரேயிருந்து அடிக்கடி கைதட்டல்களும், ஆரவாரங்களும் எழுந்து கொண்டிருந்தன. இடையிடையே ‘வாழ்க’வும், ‘ஒழிக’வும் தமிழ் வளர்நத்து கொண்டிருந்த்து.”

நூலாசிரியர் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதியது இன்றும் அரசியலில் தொடர்கதையாகத் தொடர்வதை நினைத்துப் பார்த்தேன். கதைகளில் நக்கல், நையாண்டி என எள்ளல் சுவைகளுடன் பாத்திரங்களின் உரையாடல் இருந்தாலும் ஏழ்மையை உணர்த்திடும், கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் கதைகள் உள்ளன. பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.

தபஸ் என்ற கதையில் காட்டுக்குச் சென்று தாடி வளர்த்து கமண்டலத்துடன் இருப்பது மட்டுமல்ல தபம். மனைவிக்காக காத்திருப்பதும் தவம் என்கிறார்.

செம்மறியாடுகள் கதையில், மதுரையின் வீதிகளை படம் பிடித்துக் காட்டுகின்றார். மனிதர்களை விட செம்மறி ஆடுகள் மேல் என்று உணர்த்துகின்றார்.

யுக தர்மம் கதையில் வித்தியாசமான இராமாயணம் எழுதி உள்ளார்.

நிமிஷங்கள், விநாடிகள் கதையில் உள்ள ஒரு வசனம் இதோ

“ஏதோ இன்கம்டாக்ஸை ஏமாற்றும் லட்ச ரூபாய், நட்சத்திரத்தை விட அதிக சம்பாத்தியம் வந்து விட்ட்து போல மயக்கம்.”

பெரிய மனிதர் கதையில் பெரிய மனிதர், பெரிய மனிதராக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார். பெயருக்கு பெரிய மனிதராக இல்லாமல் உண்மையில் மதிக்கும் பெரிய மனிதராக வாழ வேண்டும் என்கிறார்.

நாலணா கதையில் பிறரிடம் ஓசியில் பெறுவதை இழுக்கு என்கிறார். அக்கதையின் முடிப்பில் உள்ள வரிகள் இதோ!

“சே. அத்தனையும் ஓசிப் பிழைப்பு. கேவலம், படு கேவலம், காசில்லா விட்டால் தான் என்ன, அறைக் கதவை மூடி உள்ளே விழுந்து கிடந்திருக்கலாமே. தடுமாறிச் சாய்ந்திருந்தா தன்மான உணர்வு எழுந்து நின்று சிரிக்கிறது, வெறிச் சிரிப்பு.

மனசாட்சி பேசுவது போல, பல இடங்களில் நூலாசிரியர் பேசி உள்ளார். பழிக்குப் பழி, வக்கிரம், சதி திட்டம் தீட்டுதல் – இப்படியே தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்து, சமுதாயத்தை சீரழித்து வரும் தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்கள் இந்நூலில் உள்ள கதைகளை குறும்படமாக எடுத்தால் நாடு, நலம் பெறும். முதுபெரும் எழுத்தாளர், நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள். மனைவியின் பசுமையான நினைவுகளுடன் நூற்றாண்டு கடந்த வாழ்ந்திட வாழ்த்துக்கள் .

Please follow and like us:

You May Also Like

More From Author