Web team
இலக்கிய இணையர் படைப்புலகம்!
(பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர்
கவிதை உறவு” – மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
நூல் பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.பக்கங்கள் : 230. விலை : ரூ.175/-
: “
*****எண்ணற்ற நூல்களின் இணையற்ற படைப்பாளர்களை பேரா. இரா. மோகன் – பேரா. நிர்மலா இணையரின் நூல்கள் பலவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்து மகிழ்ந்து, உரைத்துப் பதிப்பித்திருக்கிறார் இலக்கிய உலகில் அவர்களது மாணவராகவும், வளர்ப்புப் பிள்ளையாகவும் விளங்குகிற கவிஞர் இரா. இரவி அவர்கள். அவர் தேர்ந்திருக்கிற அத்தனைத் தொகுதிகளுமே ஏற்கெனவே பலரால், பத்திரிகைகளால் பாராட்டப்பட்டவை. கவிஞர் இரவி அவர்களின் மதிப்புரைகளில் அந்நூல்களின் சிறந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்ந்து தொகுத்த அப்பகுதிகள் தேனாய் இருக்கின்றன. முதல் நூல் கணினியுகத்திற்குத் திருவள்ளுவர், இந்நூலின் உள்ளடக்கம் பேரா. மோகன் அவர்களின் உரையாகும். இது சென்னை கம்பன் கழக நிகழ்வொன்றில் வழங்கப்பட்டது. பின்னர் நூலாகவும் வெளியிடப்-பட்டது. 12 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். கணினி யுகம் இது. இதில் நுழைவோர்க்கு வள்ளுவர் வழங்கியிருக்கிற செய்திகளைத் தொகுத்தமை சிறப்பு. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒருவர் எனுமாறு பன்னிரு பேரறிஞர் தம் கருத்துகளை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. பேரா. மோகன் அவர்களின் ஆற்றல்மிக்கப் படைப்பெனும் இரவியின் மதிப்பீடே நமது மதிப்பீடுமாகும்.
‘சங்க இலக்கியச் சால்பு’, ‘சங்க இலக்கியச் சாறு’ ஆகிய இரு நூல்களிலும் சுவையான சிலிர்ப்பான தேர்ந்த இலக்கியக் காட்சிகளை பேரா. மோகன் தந்திருப்பதைப் பாராட்டியிருக்கிறார் கவிஞர் இரா. இரவி. பேரறிஞர் தமிழண்ணல் உரைத்திருப்பது போல், “ஒருவன் தமிழ் உரைநடையில் சிறந்த பயிற்சி பெற வேண்டுமெனில் உரையாசிரியர்களின் உரைநடை-களையும் உரைகளையும் படித்தே ஆக வேண்டும்” என்ற கருத்துக்கிசைந்து வளர்ந்தவர் பேரா. இரா.மோகன் என்பது குறிப்பிடத்-தக்கது.
. ‘பன்முக நோக்கில் புறநானூறு’ அமெரிக்காவில் நடந்த புறநானூறு மாநாட்டில் வழங்கப்பட்ட பேருரையின் தொகுப்பு என்பதிலும் மேலாய், படப்பிடிப்பு எனும் வண்ணம் காட்சிப்படுத்தப்-பட்டுள்ளது. இந்நூல் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் இலக்கிய மகுடத்தில் வைரக்கல் என்கிறார் கவிஞர். இதுபோலவே பன்முக நோக்கில் குறுந்தொகையும் தொடர்ந்து, “தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள்” மதிப்பீடும் சங்க இலக்கியச் சிறப்பினை வெளிப்படுத்துகின்றது. பேரா. இரா. மோகன் அவர்கள் தம் அணிந்துரை-களால் பல நூல்களை அணிசெய்து மகிழ்ந்திருக்கிறார். அவற்றின் தொகுப்பு ‘இலக்கிய மாலை’, கவிஞர் இரா. இரவியின் ‘சுட்டும் விழி’யோடு எழுத்தாளர் சௌந்தரராஜனின் நூலுக்கும் தாம் அமெரிக்கா செல்லும் பரபரப்பிலும் அணிந்துரை வழங்கிய அன்பை நெகிழ்ந்து குறிப்பிடும் கவிஞர் இரவி. மோகன் அவர்களின் அணிந்துரைகளை ‘அக்மார்க்’ முத்திரைக்கு இணையாகச் சொல்வது அழகு.
அணிந்துரை தருவதை பேரா. இரா. மோகன் அவர்கள் தொல்லையாகக் கருதுவதில்லை. தூய நட்பின் வெளிப்பாடாகவும், தமிழ்த் தொண்டாகவும் கருதுவார். பேராசிரியரின் தனித்த படைப்புகள் போலவே, பேரா. நிர்மலா அவர்களுடனும் இணைந்து பல நூல்கள் தந்துள்ளார்.
‘பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்’ நூலைச் சுவையாக்க நவீன கவிதையொன்றையும் இலக்கிய இணையர் மேற்கோள் காட்டி இருக்கிறார்கள். இவை புதிய தமிழ்க் கவிதைகளில் சிலப்பதிகாரத்தின் தாக்கமாக அமைந்துள்ளன. வாழ்க்கை வரலாறுகளைப் பொறுத்தமட்டில் மு.வ. (3 நூல்கள்), மீரா, வ.சு.ப. மாணிக்கம், டாக்டர் ஔவை நடராசனார், சிற்பு, ஒளவை துரைசாமி, தி.க.சி., அப்துல் கலாம், குலோத்துங்கன், இறையன்பு என்று பல இலக்கிய ஆளுமைகளுக்குப் புத்தகச் சிறப்பளித்துள்ள பெருந்தன்மையப் போற்றி உள்ளார் இரவி. மகிழ்ச்சி மந்திரம், நல்லவை நாற்பது, இனியவை நாற்பது, படித்தாலே இனிக்கும் போன்ற நூல்களில் பேரா. மோகன் அவர்களின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.
கவிதைக் களஞ்சியம், அயலகக் கவிதைக் குயில்கள், கவிதை ஒளி, கவிதை வெளியினிலே, கவிதை அலைவரிசை, ஏர்வாடியும் எல்லோரும் நலம் வாழ ஏர்வாடியாரின் சிந்தனைகள் போன்ற நூல்களில் கவிஞர்கள் பலரது கவிதை வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டும் பரந்த மனதை கவிஞர் இரவி வெளிப்படுத்தியுள்ளார். பேராசிரியர் மோகன், பேரா. நிர்மலா மோகன் இணையருக்கு கவிஞர் இரா. இரவி போர்த்திச் சிறப்பித்துள்ல பொன்னாடை இந்நூல்