தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகப் பணப் புழக்கத்திற்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக், “பொதுமக்கள் நகைகள் வாங்க அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும்போது, அந்தப் பணம் உங்களுடையது தான் என்பதையும், எதற்காக எடுத்துச் செல்கிறீர்கள் என்பதையும் நிரூபிக்கத் தகுந்த ஆதாரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு சவரன் தங்கம் சுமார் ₹1.20 லட்சம் என்ற உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விதித்துள்ள ₹50,000 வரம்பு நகை வாங்குவோருக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு சவரன் நகை கூட வாங்க முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தால் எப்படி?” எனப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தரப்பில் இந்த வரம்பைத் தளர்த்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், முறையான ஆவணங்கள் இன்றி ₹50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் எனப் பறக்கும் படையினர் எச்சரித்துள்ளனர்.

