வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது, அக்டோபர் மாதத்தில் 3 மற்றும் 4வது வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை நிறைவுப்பெற்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப் 30 வரை தமிழகம், புதுவை காரைக்காலில் பதிவான மழையின் அளவு 39 செ.மீ ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 33 செ.மீ. இயல்பைவிட 18% அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. மழைப்பொழிவில் இயல்பான அளவில் இருந்து 19% வரை கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பின் அது இயல்பான அளவாகவே கருதப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழையில் கடந்தாண்டை ஒப்பிடும்போது தமிழகத்தில் இயல்பைவிட 14% இயல்பைவிட அதிகமாக மழைப்பதிவாகி உள்ளது. கடந்தாண்டு 8% இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்தாண்டு 74%-ம், இந்தாண்டு 43%-ம் இயல்பைவிட அதிகமாக மழைப்பதிவாகி உள்ளது.
கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ஆந்திர பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளை வடகிழக்கு பருவமழை இயல்பு, இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென் தமிழகத்தில் இயல்பு, இயல்பைவிட குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருமழையில் வானிலை முன்னறிவிப்பில் எல்நினோ, லானினா என்பன ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் லானினா உருவாவதற்கான வாய்ப்புகள் 80% அதிகம். கடந்த 82 வருடங்களில் லானினா வருடங்களாக பார்க்கப்பட்ட 42 வருடங்களில் 23 வருடங்கள் இயல்பாகவும், 13 வருடங்கள் இயல்பைவிட குறைவாகவும், 6 வருடங்கள் இயல்பைவிட அதிகமாகவும் மழைப்பொழிவு இருந்துள்ளது.
அதாவது, 69% இயல்பு, இயல்பைவிட அதிகமாகவும், 31% இயல்பைவிட குறைவாக இருந்துள்ளது.
லானினா வருடங்களாக இருந்த 2010, 2021 ஆகிய வருடங்களில் 2010ல் இயல்பைவிட 43% அதிகமாகவும், 2021ல் 63% இயல்பைவிட அதிகமாக இருந்துள்ளது. மற்றொரு லாமினா வருடமான 2016ல் 62% இயல்பைவிட குறைவாக மழைப்பொழிவு இருந்துள்ளது. எனவே, லானினா என்பது வானிலையில் ஒரு காரணியாக இருந்தாலும், மற்ற காரணிகளையும் வைத்துதான் வானிலை அளவிடப்படுகிறது. புயல் சின்னத்தை வெகுகாலத்திற்கு முன்பே துல்லியமாக கணிப்பதற்கான சூழல் இல்லை. 4 வாரம் என்கிற காலகட்டத்திற்குள்தான் கணிக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாதத்தில் 3 மற்றும் 4வது வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலையை மிகத் துல்லியத்தன்மை உடன் கணிப்பதற்கான அறிவியல் சூழல் உள்ளை. குறுகிய காலத்தில் அதிக கனமழை பெய்யும் சூழலும் உள்ளது. சென்னைக்குள்ளேயே ஒரு பகுதிக்கும், மற்ற பகுதிக்குமான மழைப்பொழிவின் அளவில் பெரிய வேறுபாடுகள் இருந்துள்ளது” என்றார்.