தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்துக்கு இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி இம்மாதம் 9ம் தேதி மாலை சென்னை வந்தார். அப்போது, தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னையில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, தி.நகர் பாண்டிபஜாரில், ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி வாயிலாக பிரச்சாரம் செய்தார்.
அடுத்த நாள் காலை, வேலுாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மதியம், கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டங்களில், நீலகிரி வேட்பாளர் மத்திய அமைச்சர் முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் இன்று தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். பின்னர் நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரவுள்ளார். மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.