பொது வாழ்வில் இருக்கும் ஒரு பெண் அரசியல் தலைவரின் மீது, “அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன்” என்ற தரம்தாழ்ந்த விமர்சனத்தை அதுவும் ஒரு பொது மேடையில் திருமாவளவன் வைத்திருப்பது மிக வருத்ததிற்குறியது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““மது ஒழிப்பு என்பதே காந்தியக் கொள்கைதான், ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்தும் விசிக தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள், நமது மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தாமல் சென்றது ஏன்? ஒருவேளை தங்களின் கொள்கைக்கு எதிராக மது ஒழிப்பை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற தோல்வியை ஒப்புக் கொண்டு, குற்ற உணர்வில் சென்று விட்டாரா?” என்று தான் பாஜக-வின் தலைவர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் கூறினாறே தவிர, உங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எவ்வித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
ஆனால், அதை சரிவர புரிந்து கொள்ளாமல், ஒரு பெண் மருத்துவர், மூத்த அரசியல் தலைவர், முன்னாள் மாநில ஆளுநர் போன்ற பல உயர் பெருமைமிக்க பதவிகளை வகித்த ஒரு பெண் தலைவர் மீது, இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதலை நீங்கள் நிகழ்த்துவீர்கள் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறான உங்களின் மாண்பற்ற விமர்சனங்கள் கடும் கண்டனத்திற்குறியது.
எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்விற்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் நீங்கள், ஒரு பெண் தலைவரைப் பற்றி நீங்கள் கூறிய அநாகரீகமாக கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.