தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தசரா திருவிழா முன்னிட்டு பல்வேறு பக்தர்கள், பல்வேறு வேடங்கள் அணிந்து இரவில் வீதி உலா செல்வது வழக்கம். தசரா திருவிழாவை ஒட்டி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அதன் பின் அந்த காணிக்கையை கோவிலில் வந்து செலுத்துவர்.
இந்த திருவிழா அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேடம் அணிந்து வழிபடுவது உண்டு. இதன் மூலம் பல பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோளத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதேபோன்று 10-ம் திருவிழாவான நாளை மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் குவிந்து வருகின்றனர்.