காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயற்படும் விவகாரத்தில் அமெரிக்காவும் கனடாவுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதே நேரத்தில் இந்தியாவின் ஆதரவும் தேவை என்பதால் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
காலிஸ்தான் இயக்க தலைவர் நிஜ்ஜார் மீது தேச துரோக வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நிஜ்ஜார் உள்பட 18 பேரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கனடா அரசை, இந்திய அரசு பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு வந்தது.
ஆனால் கனடா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில்தான் நிஜ்ஜார், கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினர்.இந்தியா கடுமையாக மறுத்ததோடு,அபத்தமான குற்றச் சாட்டு என்று கூறியது.
சுமார் ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். கடந்த வாரம் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
பொய்களை மட்டுமே பேசி வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மக்கள் செல்வாக்கு 15 சதவீதத்துக்கும் கீழே சரிந்துள்ளது. மேலும், லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவை நீக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, சீனாவின் உதவியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், கனடாவுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க அரசு, காலிஸ்தான் தீவிரவாதிகளுடனான ஜஸ்டின் ட்ரூடோவின் சந்தேகத்துக்குரிய தொடர்புகள் குறித்து கவலைப் பட்டதாக தெரியவில்லை.
ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையான பியரே, கனடாவை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே கனடா காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்தியாவில் தேடப் பட்ட காலிஸ்தான் தீவிரவாதி தல்விந்தர் சிங் பர்மாவை ஒப்படைக்கும் படி இந்திய அரசு கனடாவிடம் கூறியது. அப்போது கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையான பியரே அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்திய விமானங்கள் நடுவானில் வெடித்து சிதறும் என்று எச்சரித்த காலிஸ்தான் தீவிரவாதி தல்விந்தர் சிங் பர்மா சொன்னது போலவே, 1985ம் ஆண்டு கனிஷ்கா ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வெடித்தது. இந்த தீவிரவாத தாக்குதலில் பலியான 329 பேரில் 268 பேர் கனடா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத் தக்கது.
கனிஷ்கா குண்டு வெடிப்பு, 9/11 க்கு முன் நடந்த மிக மோசமான தீவிரவாத தாக்குதலாகும். இதை மறந்து விட்டு, இன்று அமெரிக்கா, தீவிரவாதிகளுக்கு துணை நிற்கும் கனடாவை நம்புகிறது.
தடைசெய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னூன், அமெரிக்காவில் இருந்து கொண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதோடு, இந்தியாவுக்கு பகிரங்க சவால் விடுகிறார். மேலும் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பல ஆண்டுகளாக நேரடி தொடர்பில் இருப்பதாகவும், பன்னூன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஐந்து கண்கள் அமைப்பின் மற்ற உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்தை இந்தியாவுக்கு எதிராக திருப்பி, தான் ஆதாயம் அடையலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ கணக்கு போடுகிறார். இதற்கு, அமெரிக்க வெளியுறவுத் துறையும்,அந்நாட்டின் பாரம்பரிய இந்திய-எதிர்ப்பு கருத்துருவாக்கமும் ஜஸ்டின் ட்ரூடோ சாதகமாக உள்ளன.
சீனா உடனான கடுமையான போட்டி மற்றும் வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவுடனான நட்பை காப்பாற்ற வேண்டிய நிலைமை என அமெரிக்கா தத்தளிக்கிறது. இந்நிலையில், வெள்ளை மனிதனின் சுமையை ஏற்றுக்கொள்வதில் இருந்து, வெள்ளை மனிதன் ஒரு சுமை என்பதை ஒப்புக்கொள்வதற்கு அமெரிக்கா மாறவேண்டும். அல்லது காலம் அமெரிக்காவை மாற்றும்.