உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
வாரணாசியில் நடைபெற்ற விழாவில், விமான நிலைய மேம்பாடு உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு, சுகாதாரம், சுற்றுலா என பல்வேறு தளங்களில் வாரணாசிக்கு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் பாலி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, பாலிக்கும் சாரணாத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த பாடுபட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.