நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்து, தங்களது ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த புகைக் குண்டுகளில் இருந்து வெளியேறிய மஞ்சள் நிற புகை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது.
மேலும், புகைக் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர், எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவிக் குதித்து அங்கும் இங்கும் ஓடினார். இதனால், எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில், சில எம்.பி.க்கள் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.
மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகைக் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அதேசமயம், இவர்களுடன் வந்திருந்த 2 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. எனினும், இவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 6-வது நபரான லலித் தலைமறைவாகி விட்டார். இவரிடம்தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன என்பதால், அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்டு அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். அப்போது, நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிப்பது, மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சி.ஆர்.பி.எஃப். கூடுதல் இயக்குனர் அனிஷ் தயாள் சிங் தலைமையில் விசாரணைக் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.