அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் வைக்கிங் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் இருந்ததாக அறியப்படும் உயிர்களை எதிர்பாராமல் அழித்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலை, வானியல் விஞ்ஞானியான ஷூல்ஸ்-மகுச்சின் ( Schulze-Makuch ) தெரிவித்துள்ளார். நாசாவின் ஆய்வு எப்படி, செவ்வாய் கிரகத்தின் உயிர்களை அழித்திருக்கும் ? வானியல் விஞ்ஞானி ஷூல்ஸ்-மகுச்சின் ( Schulze-Makuch ) கூறும் காரணங்கள் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செவ்வாய் கிரகம் ஒரு தரிசு நிலமா? வளமான நிலமா ? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா ? இல்லையா ? செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா ? இல்லையா ? இந்த கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுபிடிக்க நீண்ட ஆண்டுகளாகவே சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
குறிப்பாக, 1970ம் ஆண்டு முதன்முறையாக, செவ்வாய் கிரகத்தை ஆராய, விண்கலத்தை அனுப்பியது அமெரிக்கா. 1975 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் முதலாவது வைக்கிங் விண்கலம் 1976 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வைக்கிங் 1 மற்றும் வைக்கிங் 2 ஆகிய இரண்டு லேண்டர்களைத் தரை இறக்கியது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா என்பதைக் கண்டறிவது இதன் முக்கியமான நோக்கமாகும்.
செவ்வாய் கிரகத்தின் மண்ணின் மாதிரிகளை சேகரித்து, பரிசிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தொடர்ச்சியான உயிரியல் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. ஆரம்பத்தில் இந்த ஆய்வுகள் செவ்வாய் கிரகத்தில், உயிர் இருந்ததற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டின.
காலப்போக்கில், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் வைக்கிங் முடிவுகள் செவ்வாய் கிரகத்தின் உயிரினங்கள் இருந்ததற்கான உறுதியான எந்த ஆதாரங்களை வழங்கவில்லை என்று முடிவு செய்தனர்.
இந்நிலையில், வானியல் விஞ்ஞானி ஷூல்ஸ்-மகுச்சின், வைக்கிங் லேண்டர்களில் இருந்து வந்த நீர், செவ்வாய் கிரக உயிரினங்களை அழித்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
பொதுவாகவே மற்ற கிரகங்களில் உள்ள உயிர்களைக் கண்டறிவதற்காக, லேண்டரில் உள்ள தண்ணீரைத் தான் விஞ்ஞானிகள் பயன்படுத்தி வந்தனர். நீண்ட காலமாகவே தண்ணீர் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் என்று கருதப்பட்டு வருகிறது. இந்த அடிப்படைக்குச் சவால் செய்திருக்கிறது ஷூல்ஸ்-மகுச்சின் கருத்து.
வைக்கிங் லேண்டர்கள் செவ்வாய் கிரகத்தில் சோதனைகளை நடத்தியபோது, கவனக்குறைவாக செவ்வாய் நிலப்பரப்பில் அதிகப்படியான திரவ நீரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதனால்,செவ்வாய் கிரகத்தின் நுண்ணுயிரிகளுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும் என்றும், Schulze-Makuch கூறியிருக்கிறார்.
மேலும், வருங்காலத்தில், செவ்வாய் கிரக ஆய்வுகளில், தண்ணீர் மட்டும் பயன்படுத்தாமல், காற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சக்கூடிய ஹைக்ரோஸ்கோபிக் உப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரை செய்திருக்கிறார்.
கிரகத்தின் சுற்று சூழலுக்கு ஏற்றவாறு புதிய உத்திகளை ஆய்வுகளில் இணைக்க வேண்டும் என்று கூறியிருக்கும் Schulze-Makuch , செவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
ஷூல்ஸ்-மகுச்சின் கருத்தைப் பின்பற்றி, விண்வெளி விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக இருந்து வந்த விண்வெளி ஆய்வுமுறைகள் மற்றும் அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.