இறுக்கி அணைக்க 600 ரூபாய்!

Estimated read time 1 min read
நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் யாராவது நம்மை அணைத்து ஆறுதல் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருவது வழக்கம்.

ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த ஏக்கத்தை பயன்படுத்தி சீனாவில் ஒரு வியாபாரமே உருவாகி இருக்கிறது. அதற்குப் பெயர் மேன் மம்ஸ் (man mums).
கஷ்டத்தில் இருக்கும் பெண்களை 5 நிமிட நேரம் அணைத்து ஆறுதல் கூறும் ஆண்களின் பெயர்தான் மேன் மம்ஸ்.
ஆண் தாய்மார்கள் என்று பொருள்படும் இந்த வேலையில் சீனாவில் பல ஆண்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்த ஆண்கள் ஒரு பெண்ணை சுமார் 5 நிமிட நேரம் அணைத்து ஆறுதல் கூற 50 யுவான்களை (600 ரூபாய்) கட்டணமாகப் பெறுகிறார்கள். ஒரு சில இடங்களில் இதைவிட அதிகமாகக்கூட கட்டணம் கொடுக்கிறார்கள்.
சீனாவைப் பொறுத்தவரை அங்கு திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
பொருளாதார சிக்கல்கள் காரணமாகவும், சுதந்திரமாக வாழும் எண்ணத்தாலும் அங்கு திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இப்படி திருமணம் செய்துகொள்ளாத பெண்கள்தான் ஆறுதலுக்காக ஆண்களின் அணைப்பை நாடுகிறார்கள்.
சீனாவில் பெண்களை 5 நிமிடங்கள் அணைக்க 600 ரூபாய் சம்பளமா என்று உடனே நீங்களும் அந்நாட்டுக்கு புறப்பட்டுவிடாதீர்கள். இந்த வேலைக்கென்று சில தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பெண்களை அணைத்து ஆறுதல் கூறும் நபர்கள் ஜிம் பாடி உடையவர்களாக இருக்க வேண்டும்.
பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும். பொறுமைசாலிகளாக இருக்க வேண்டும். அவர்கள் மீது எந்த வழக்குகளும் இருக்கக் கூடாது.
இந்த அணைக்கும் வேலையை ரயில் நிலையம் போன்ற பொது இடத்தில்தான் செய்யவேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
கஷ்டமான நேரங்களில் ஆண்களிடம் இருந்து அணைப்பைப் பெறுவதால் தங்களுக்கு ஆறுதல் கிடைப்பதாக இந்த சேவையைப் பயன்படுத்தியுள்ள சில பெண்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
“அலுவலகத்தில் 3 மணிநேரம் ஓவர்டைம் செய்த களைப்பைப் போக்கிக்கொள்ள ‘மேன் மம்’ சேவையைப் பயன்படுத்தினேன். அது மனதுக்கு இதமாக இருந்தது” என்று ஒரு பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆறுதல் பெறும் பெண்களைப் போலவே, அவர்களை அணைத்து ஆறுதல் கூறும் ஆண்களும் இந்த வேலையில் திருப்தியாக இருக்கிறார்கள்.
”வேலையிடங்களில் மன அழுத்தத்துக்கு ஆளாகும் பெண்களை அணைத்து அவர்களை ஆறுதல்படுத்தும் வேலை நிறைவாக இருக்கிறது” என்று மேன் மம்மாக இருக்கும் ஒருவர் தன் சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இது பாலியல் தொழிலுக்கான ஆரம்பமாகி விடக் கூடாதே என்று கவலைப்படுகிறது சீன அரசு.
– பி.எம்.சுதிர்.

Please follow and like us:

You May Also Like

More From Author