சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என, தி.மு.க., தெரிவித்தது.
கடந்த தேர்தலில் கொடுத்த தொகுதிகளை தர மறுப்பதுடன், ராஜ்யசபா சீட்டும் தராததால், வைகோ அதிருப்தி அடைந்தார்.
அவரது மகன் துரையின் ஆதரவாளர்கள், ‘தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்’ என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
கூட்டணி பேச்சு, தொகுதிகள் எண்ணிக்கை போன்ற விவகாரங்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர்நிலை கூட்டம் நடந்தது.
இதன் பிறகு வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக தலைமை அலுவலகம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.வைகோ கூறுகையில், ”நான்கு தொகுதிகள் கிடைத்தது மகிழ்ச்சி. ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மற்ற மூன்று தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிடுவோம்,” என்றார்.
கடந்த (2021) சட்டசபை தேர்தலில் இதே தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க., 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தாலும், இந்த முறை 4 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலும், 3 இடங்களில் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனிலும், ஒரு இடத்தில் தனி சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த முறை ம.தி.மு.க.வுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும், அதை ஏற்றுக்கொள்ள ஒரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, ம.தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவையும் தி.மு.க.ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை 3 முறை மாநிலங்களவைக்கும், 2 முறை மக்களவைக்கும் எம்.பி.யாக சென்றுள்ள வைகோ, 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு, அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில், தற்போது தி.மு.க. கூட்டணியில் மாநிலங்களவை சீட் கிடைக்கும் என்று வைகோ எதிர்பார்த்தார். ஆனால், அது தே.மு.தி.க. வசம் சென்றுவிட்டதால், அந்த வாய்ப்பு கைநழுவி போனது.
அதனால், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்த முறை சட்டசபை தேர்தலில் களம் இறங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் சட்டசபை தேர்தலில் கோதாவில் குதிக்க இருக்கிறார். இந்த முறை வைகோ, கோவில்பெட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். அதுவும் தனிச் சின்னத்தில் அவர் களம் காண்பார் என்று தெரிகிறது.
